Published : 14 Mar 2014 09:10 AM
Last Updated : 14 Mar 2014 09:10 AM
திமுக வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்கு உழைத்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க வேட்பாளர்களின் பட்டியலை, செய்தியாளர்களிடம் படித்து விட்டு, வெளியே வந்தபோது, என் உள்ளம் என்னிடம் இல்லை. காரணம் என்ன என்பதை, என்னை முழுவதும் அறிந்த நீ நன்றாகவே உணர்வாய். இந்த முறை தன்னலம் பாராமல் கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்த, மூத்த சில உடன்பிறப்புகளின் விருப்பங் களை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.
அவர்கள் என்னிடம் கேட்ட போது, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்று என்னால் கூறப்பட்ட போதிலும், கூட்டணி உணர்வையும், அவர்களுடைய உள்ளக் கிடக்கையையும் எண்ணிப் பார்க்க வேண்டிய நெருக்கடிக்கு நான் தள்ளப்பட்டேன்.
தம்பி துரைமுருகன் 24 மணி நேரமும் என்னுடன் இருப்பவர். வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உதவி செய்தவர். அவருடைய மகனுக்காக வேலூர் தொகுதி வேண்டுமென்று, விருப்பம் தெரிவித்தபோது, என்னால் அதனை மறுக்க முடியவில்லை. ஆனால், நம்முடன் பல ஆண்டு காலமாகத் தோழமையிலுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து போட்டியிட்ட தொகுதியை, அவர்கள் கேட்ட போது எங்களால் மறுக்க முடிய வில்லை.
மற்றொரு தொகுதி, என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி. அங்கு விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், டி.ஆர். பாலு. பழனிமாணிக்கம், அழகு திருநாவுக்கரசு முக்கியமானவர்கள்.
துரைமுருகன் ஆகட்டும், டி.ஆர்.பாலு ஆகட்டும், பழனிமாணிக்கம் ஆகட்டும், இவர்கள் எல்லாம் எனதருமைத் தம்பிகள், நான் வளர்த்தவர்கள். இதுபோலத்தான், சுப. தங்கவேலன், தன் மகன் சம்பத்துக்கு அனுமதி கோரினார். திருவண்ணாமலையில் கு. பிச்சாண்டி, தன் சகோதரர் கு. கருணாநிதிக்கும், கோவையில் பொங்கலூர் பழனிச்சாமி தன் மகன் பைந்தமிழ் பாரிக்கும், திண்டுக்கல் ஐ.பெரியசாமியும், விழுப்புரம் பொன்முடியும், திருவண்ணாமலை எ.வ.வேலுவும் தங்களின் மகன்கள் போட்டியிடுவதற்குத் தயாராக இருந்த போதிலும், என் உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவே இல்லை.
தற்போது நாடாளுமன்ற உறுப் பினர்களாக நன்றாகப் பணியாற்றி வந்த ஒன்பது பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடியவில்லை. வேட்பாளர்கள் புதிய முகங்களாக இருக்க வேண்டும், இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பலரும் விருப்பம் தெரிவித்தார்கள். மகளிருக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டுமென்றும் யோசித்தோம். இரவு முழுவதும் தூங்காமல் மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு தொகுதியாக அலசி ஆராய்ந்து, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளோம். அவர்களையெல்லாம் வெற்றி வேட்பாளர்களாக ஆக்கிட வேண்டிய கடமையும், உரிமையும் உனக்குள்ளது.
ஒற்றுமை உணர்வோடு, தனிப்பட்ட காழ்ப்பு ணர்வுகளை கை கழுவி விட்டு, இந்த முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால், அடுத்த முறை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதுதான் முக்கியமானது என்று பணிகளை ஆற்ற வேண்டும். நானோ, பொதுச் செயலாளரோ, ஒவ்வொரு நாளும் தொகுதி தொகுதியாகச் சென்று பிரச்சாரம் செய்ய இயலாவிட்டாலும், உடல்நிலை இடம் கொடுக்கும் வரையில் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT