Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM
அதிகரித்து வரும் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களது உடல் நலனை பாதுகாத்துக்கொள்ளவும், கோடை கால நோய்கள் வராமல் தடுக்கவும் சித்த மருத்துவத்தில் பல்வேறு வழிமுறைகள் உள்ளதாக சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக கடந்த ஏப்ரல் 2-ம் தேதி 110.1 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக உயர்ந்து வந்த வெயில் அளவு 108.68 டிகிரியாக பதிவாகி உள்ளன.
இவ்வாறு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரமுடியாமல் பரிதவித்து வருகின்றனர். இது மட்டுமின்றி கோடை காலத்தில் வெயில் உஷ்ணத்தால் ஏற்படும் கோடைகால நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மக்கள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கோடை வெயிலை சமாளிக்கவும், கோடை கால நோய் வராமல் தடுக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு வழிமுறைகள் உள்ளதாக சித்த மருத்துவர் டி. பாஸ்கரன் ‘இந்து தமிழ் திசை நாளிதழிடம்’ கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் பதிவாகும் வெயில் அளவு இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பதிவாகியுள்ளது.
வெயில் தாக்கம் காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளன. கோடையில் ஏற்படும் அதிகபட்ச வெயிலால் மனிதர்களுக்கு அம்மை, முகப்பரு, அக்கி, கட்டி, தோல் அரிப்பு, தலை சுற்றல் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் ஏற்படும். இது மட்டுமின்றி கடும் வெப்பதால் நாவறட்சி அதிகமாகி மயக்கம் ஏற்படும். அதேபோல, வெப்பத்தால் பலவிதமான கிருமிகள் அதிகரித்து உடல் பாதிக்கப்படும். வெயில் காலங்களில் உடலில் வியர்வை அதிகமாகவே சுரக்கும். இதனால், நச்சுக் கிருமிகள் பரவி காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புண்டு.
இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும், கடும் வெப்பத்தை சமாளிக்க பல வழிமுறைகள் உள்ளன. கோடை காலத்தில் மனிதர்கள் அதிக அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். நீர்ச்சத்து அதிகமாக உள்ள திராட்சை, தர்பூசணி, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் ஆகியவற்றை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சற்று தணிக்க முடியும். பகல் நேரங்களில் தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல நேரிட்டால் குடையுடன் செல்லலாம்.
கோடை காலம் என்பதால் தினசரி காலை மற்றும் மாலை என 2 முறை குளிக்கலாம். கோடையில் தண்ணீர் தாகத்தை தடுக்க குளிரூட்டப்பட்ட தண்ணீரை (ஐஸ்) குடிக்கக்கூடாது. அது உடல் வெப்பத்தை மேலும் அதிகரிப்பது மட்டும் அல்லாமல், தொண்டை கரகரப்பு, இருமல், சளி போன்றவைகளை ஏற்படுத்தும்.
அதேபோல, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும். கோடை காலத்தில் குழந்தைகளுக்கு உடல் அரிப்பு, சொறி, சிரங்கு,காய்ச்சல், உடலில் கட்டி ஆகியவை ஏற்படும். எனவே, வெயில் நேரங்களில் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்வதை தவிர்க்க வேண்டும்.
கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் உடலில் நீரிழப்பு, மூளை செல்கள் சேதப்பட வாய்ப்புள்ளதால் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்துக்காக வெள்ளரிக் காய், முலாம்பழம், தர்பூசணி, நுங்கு, பப்பாளி போன்ற இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட பழ வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இதை தொடர்ந்து சாப்பிடும் போது உடல் சீதோஷ்ணம் சம நிலையில் இருக்கும்.
அவரவர் உடலுக்கு ஏற்ற உணவு வகைகள், சுத்தமான குடிநீர், கதர் ஆடைகளை அணிவது வெயில் காலத்தில் நல்ல பயனை தரும். துளசி, கற்பூரவல்லி மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட பானங்களை அருந்தலாம்.
கோடை வெயிலை எளிதாக சமாளிக்க துளசி அல்லது கற்பூரவள்ளி இலைகளை நீரில் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன்பிறகு அந்த தண்ணீரை ஆறவிட்டு அதை அவ்வப்போது குடித்து வந்தால் உடல் வெப்பம் குறையும். அதேபோல, சீரக குடிநீர் அல்லது எலுமிச்சை பானம் தயார் செய்து குடித்து வந்தாலும் நல்ல பயனை தரும்.
நிறைய பழ வகைகளை சாப்பிடலாம். கோடை காலம் என்பதால் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பதும் நல்ல பலனை தரும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT