Published : 09 Nov 2015 06:54 PM
Last Updated : 09 Nov 2015 06:54 PM

பிஹார் தேர்தல் தோல்வியால் கலக்கத்தில் தமிழக பாஜக

'பிஹார் தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமையும்; அதை வைத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தலாம்' என்ற எதிர்பார்ப்பில் இருந்தது தமிழக பாஜக மேலிடம். ஆனால், பிஹார் தேர்தலில் பாஜக சந்தித்த தோல்வி, தமிழக பாஜகவை இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது.

கடந்த வாரம் 'தி இந்து'வுக்கு பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ் அளித்த பிரத்யேக பேட்டியில் பேட்டியில், "பிஹார் தேர்தல் வெற்றி பிரதமர் மோடி மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்தை நிரூபிக்கும். தமிழகத்தில் மோடி பிரச்சாரம் செய்யும்போது தமிழக பாஜகவுக்கு நல்லதொரு மாற்றம் ஏற்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பிரச்சாரத்தையும் விஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறும்போது, "பிஹார் தேர்தலின்போது பாஜக பணபலம், மனிதவளம், விளம்பரங்கள் உட்பட அனைத்து விதமான வழிமுறைகளையும் கையாண்டது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு முன்னதாக எந்த ஒரு பிரதமரும் இந்த அளவுக்கு பிரச்சாரம் செய்ததில்லை. பிஹார் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிற கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவின் தாக்கம் குறித்து மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் துறையின் இணை பேராசிரியர் சி.லக்‌ஷ்மணன் கூறும்போது, "பிஹார் தேர்தல் முடிவு வெளியாகியுள்ள நிலையில் தமிழக தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும்போது பாஜக யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவை தானே சுயமாக எடுக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. கூட்டணிக்கான கட்சிகளை தேர்வு செய்யும் அதிகாரம் தனது கைகளில் இருந்து நழுவியுள்ள நிலையில், எந்த கட்சி பாஜக கூட்டணிக்கு முன் வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. மோடியை பிரச்சார பீரங்கியாக பயன்படுத்தும் பாஜகவின் தேர்தல் யுத்த தந்திரத்தை தவிடுபொடியாக்கியுள்ளது பிஹார் தேர்தல் முடிவு" எனத் தெரிவித்துள்ளார்.

நிதானமற்ற விமர்சனங்கள்: எச்.ராஜா

பிஹார் தேர்தல் தோல்வி குறித்து நிதானமற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியிருந்தாலும் அதிக ஓட்டு சதவீதம் பெற்ற தனிப்பெரும் கட்சியாக முதலிடம் பிடித்துள்ளது. அந்த வகையில் பாஜக 24.8 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. தமிழகத்தில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக உருவாகும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழில் - பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x