Published : 04 Apr 2021 04:19 PM
Last Updated : 04 Apr 2021 04:19 PM
அரசியலில் அனைத்துக்கும் தயாராகவே வந்திருக்கிறேன் என்றும், அரசியலுக்குத் தடையாக இருந்தால் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
''தேர்தலை முன்னிட்டு ஊடகங்களை, குறிப்பாக எதிர்க்கட்சி ஊடகங்களைக்கூட நாங்கள் சாதகமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது. மாறாக இதில் எந்த சூழ்ச்சியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது எல்லோருக்குமான ஜனநாயகம் என்பதால், இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
நான் அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தை ஏற்கெனவே ஓரளவு சொல்லிவிட்டேன். வரலாறு என்னை இங்கே களத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. என் வேலை உண்டு, எனது கலை உண்டு என்றிருந்தேன். எனது தேவை அரசியலுக்குத் தேவையா என யோசித்துப் பார்க்காமல் இருந்தது தவறுதான். அதே தவறைப் பலரும் செய்துள்ளார்கள். அரசியல் வருகையை முன்பாகவே செய்திருக்க வேண்டும் என உணரும் வேளையில், தற்போதாவது செய்தேனே என்பதை நினைத்து மகிழ்கிறேன்.
அரசியலில் எனக்கு மிரட்டல்கள் வந்தன. அதற்காக எனக்கு பயம் கிடையாது. அனைத்துக்கும் தயாராகவே இங்கு வந்திருக்கிறேன். மிரட்டலுக்கெல்லாம் இங்கு இடம் கிடையாது. எனது எஞ்சிய நாட்களை மக்களுக்காக என முடிவு செய்துவிட்டேன்.
அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், சினிமாவில் நடிக்கிறேன் என்றால், அது எனது தொழில். பிறர் தயவில் வாழக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து எனது வேலையைச் செய்வேன். சினிமா எனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருந்தால், அது நிறுத்தப்படும்''.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
அப்போது சமத்துவ மக்கள் கட்சி மாநில முதன்மை துணைப் பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி, கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT