Published : 04 Apr 2021 08:18 AM
Last Updated : 04 Apr 2021 08:18 AM
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி. சந்திரன் திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
திருச்செங்கோட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து களமிறங்கிய அமமுக நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் கொல்லிமலை பி.சந்திரன் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியின்போது சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. பி ஆர் சுந்தரம், உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலரும் உடனிருந்தனர். இணைப்பு நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி கூறியதாவது:
சேந்தமங்கலத்தில் அமமுக வேட்பாளராக போட்டியிட இருந்த பி சந்திரன் எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என்பதற்காக தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார் இனி அவர் அதிமுக வேட்பாளர் சந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி எடப்பாடி யாரின் அலை தமிழகத்தில் வீசுகிறது என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என்பதற்காக அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன் நாமக்கல் மாவட்ட துணை செயலாளராக இருந்து வந்துள்ளேன்.
போட்டியிலிருந்து விலகிக் கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் காலம் காலமாக நாங்கள் அதிமுகதான். இடையிலே சென்றதற்கு காரணம் திமுக நண்பரொருவர் கட்சிக்கு வந்து கட்சிக்கு உழைப்பதாக கூறி நடந்துகொண்ட விதத்தில் ஏற்பட்ட மனக்கசப்பால் நான் அமமுகவில் இணைந்தேன்.
இன்றைய சூழ்நிலையில் தீயசக்தி திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுக்க அதிமுகவில் இணைந்து செயல்படுவது தான் சரியாக இருக்கும் என கருதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய என்னுடைய உழைப்பை தருவேன். பாடுபடுவேன். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்வேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT