Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடுவது யார் என்பதில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் 2 முன்னாள் மேயர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கடந்த 1967, 1971-ல் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வென்றுள்ளார். அதிமுக சார்பில் 1984-ல் சைதை துரைசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006, 2011 தேர்தலில், அதிமுக சார்பில் ஜி.செந்தமிழன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மா.சுப்பிரமணியன் வெற்றி பெற்றார்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் மா.சுப்பிரமணியன், அதிமுக சார்பில் சைதை துரைசாமி, அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சினேக பிரியா, நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்குமார் உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் சைதை துரைசாமியும் மா.சுப்பிரமணியனும் சென்னை மேயராகவும், எம்எல்ஏவாகவும் பதவி வகித்தவர்கள்.
திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தனது தொகுதியை தக்கவைத்துக் கொள்ள சைதாப்பேட்டையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் பசுமை திட்டம் மூலம் ஏராளமான மரக்கன்றுகள் நடுதல், கலைஞர் கணினி இலவச மையம், மாநில அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தியது, கோதண்டராமர் கோயில் குளத்தை தூர்வாரியது, புயல் மற்றும் கரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சுட்டிக்காட்டியும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை முன் வைத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமி, அவருடைய மனிதநேய அறக்கட்டளையால் நன்கு அறியப்பட்டவர். 1984-ம் ஆண்டு தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக அரசின் சாதனை திட்டங்களையும், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளையும் முன்வைத்து, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் எம்எல்ஏவாக இருந்தபோதும், மேயராக இருந்தபோதும் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறிவருகிறார்.
அமமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், தான் எம்எல்ஏவாக இருக்கும்போது மேற்கொள்ளப்பட்ட சாலைகள் விரிவாக்கம், சிமென்ட் சாலைகள், குடிநீர் வசதி, உடற்பயிற்சிக் கூடம், நியாய விலை கடைகள் திறப்பு உள்ளிட்டவற்றை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேக பிரியா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர், நடுநிலையாளர்கள், இளைஞர்கள் வாக்குகளைப் பெறுவதில் கூடுதல் கவனம் செலுத்தி, அரசியலில் நல்ல மாற்றம் ஏற்பட ஆதரவு தரக் கோரி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சைதாப்பேட்டை ஆற்றோரம் இருந்தவர்கள் மற்றும் ஜாபர்கான்பேட்டையில் இருந்த சிலர் பெருங்குடி, கண்ணகி நகரில் மறு குடியமர்வு செய்யப்பட்டனர். இது திமுகவுக்கு பாதகமாக இருக்கிறது. அதுபோல், முன்னாள் அமைச்சர் செந்தமிழன் போட்டியிடுவதால், அதிமுக ஓட்டுகள் பிரிவது அதிமுகவுக்கு பாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக என யார் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தாலும் அவர்களுக்கு முக்கிய பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதால், இருவருக்கும் இடையே போட்டி கடுமையாகவே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT