Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
மயிலாப்பூர் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக - திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்கள், சாந்தோம் தேவாலயம் ஆகியவை உள்ளதால் மயிலாப்பூர் தொகுதி ஆன்மீக தொகுதியாக கருதப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் இந்த முறையும் அதிமுக சார்பில் வேட்பாளராக களத்தில் உள்ளார். திமுக சார்பில் த.வேலு, மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகை பிரியா, அமமுக சார்பில் கார்த்திக், நாம் தமிழர் கட்சி சார்பில் மகாலட்சுமி உட்பட மொத்தம் 23 பேர் களத்தில் உள்ளனர்.
போக்குவரத்து நெரிசல், நடைபாதை ஆக்கிரமிப்பு, குறுகிய சாலைகள், அவ்வப்போது தலைகாட்டும் தண்ணீர் பிரச்சினை, குவிந்து கிடக்கும் குப்பை போன்றவை மயிலாப்பூர் தொகுதியின் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இந்த பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைப்பதாக கூறி அதிமுக, திமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
திமுக சார்பில் போட்டியிடும் வேலு, திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக 74,236 வாக்குகளையும், அதிமுக 42,457 வாக்குகளையும் பெற்றிருந்தது. அத்தேர்தலில் கிடைத்தது போலவே இப்போதும் மயிலாப்பூர் மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்று திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ், அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்களை கூறி அதிமுகவினர் வாக்கு சேகரிக்கிறார்கள்.
மாற்றம் வேண்டி பிரச்சாரம்
இந்நிலையில் அதிமுக, திமுகவை புறக்கணித்தால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 18,722 வாக்குகள் கிடைத்தன. இதனால் அந்தக் கட்சியின் வேட்பாளர் நடிகை பிரியா மிகுந்த நம்பிக்கையுடன் தொகுதியில் வலம் வருகிறார்.
இருப்பினும் அதிமுக - திமுக இடையேதான் இங்கு நேரடி போட்டி நிலவுகிறது. மயிலாப்பூர் தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே வெற்றி வாய்ப்பு என்பது சம அளவில் உள்ளது. கடைசி நேர பிரச்சாரத்தை வைத்தே வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT