Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் 2 முறை போட்டியிட்டு வென்றுள்ளார். ஆன்மிக மகான் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர், வல்லக்கோட்டை முருகன், குன்றத்தூர் முருகன், காமாட்சியம்மன் கோயில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடம் உள்ளிட்டவற்றுடன் மிகப்பெரிய தொழில் நகரமாகவும் திகழ்கிறது.
ஸ்ரீபெரும்புதூர்(தனி) மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 514. இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 68. பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 396 பேர். மூன்றாம் பாலினத்தவர் 50 பேர் உள்ளனர். தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பேரூராட்சிகள் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 100 ஊராட்சிகள் உள்ளன. வன்னியர், ஆதிதிராவிடர், முதலியார் மற்றும் சில சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற 15 சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாகவுள்ள கே.பழனி, காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த கே.செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி வேட்பாளர் தணிகைவேல், நாம் தமிழர் சார்பில் புஷ்பராஜ், அமமுக சார்பில் மொளச்சூர் இரா.பெருமாள் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் - படப்பை, ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு இணைக்கும் சாலைகளில் மேம்பாலம், சுங்குவார்சத்திரம், மாங்காடு பகுதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தல், குன்றத்தூரில் தாலுகா மருத்துவமனை, அரசு கலை கல்லூரி, தொழிலாளர்கள் நிறைந்துள்ளதால் 24 மணிநேர ஈஎஸ்ஐ மருத்துவமனை, தொழிலாளர் தங்கும் விடுதிகள், பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாகும்.
கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்காததால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை திமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதால், அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ போட்டியிடுவதால் அவர் கணிசமான வாக்குகளை பெறுவார். இருப்பினும் காங்கிரஸ் - அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
ஆளும் கட்சியாக இருந்த எம்எல்ஏ பழனி வெற்றி பெற்றால் கண்டிப்பாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன் என கூறி, வாக்கு சேகரிக்கிறார். மேலும் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகம், குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மேம்பாலம், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம், ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம் போன்றவை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கின்றார்.
காங்கிரஸ் வெற்றி பெற்றால் மக்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்து வருகிறார். அதிமுக - காங்கிரஸ் இடையேதான் போட்டி என்பதால், மக்கள் இவர்களின் பிரச்சாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வாக்காளர்களின் எண்ணம் என்ன என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT