Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

கூடுதலாக 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தலா?- கீழ்கதிர்பூர் விவசாயிகள் அதிர்ச்சி

காஞ்சிபுரம்

கீழ்கதிர்பூர் கிராமத்தில் 130 விவசாயிகளிடம் உள்ள 450 ஏக்கர் விவசாய நிலங்கள் அரசு ஆவணங்களில் அனாதீனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், தங்களிடம் உள்ள ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் விவசாயிகள் கடந்த 1971-ம் ஆண்டில் இருந்து பல்வேறு அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக மனு கொடுத்து வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இச்சூழலில் பல்வேறு தேவைகளுக்காக அரசு இவர்களிடம் உள்ள நிலங்களை கையகப்படுத்தும்போது அரசு கணக்கில் அனாதீனம் என்று இருப்பதால் இழப்பீடு இல்லாமல் நிலத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே, விவசாயிகள் சேர்ந்து கூட்டத்தை கூட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். இந்நிலையில் பாலுசெட்டி சத்திரம் போலீஸார், மற்றும் வருவாய் துறையினர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சு வார்த்தையில் தேர்தல் புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்றும், தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்ததும் ஆட்சியரிடம் பேச அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர்.

பேருந்து நிலையம் அமைக்க ஏற்கனவே 10 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இழப்பீடு இல்லாமல் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வரும் காலங்களை கருத்தில் கொண்டு மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்க மேலும் 30 ஏக்கர் நிலத்தை நகராட்சிக்கு வழங்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள பழைய கடிதம் ஒன்று சமூக வலைதலங்களில் வெளியாகி அந்த கிராமத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தப் பகுதி விவசாயிகள் பலர் தேர்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்றாலும் குறைந்தபட்சம் வேட்பாளர்களாவது எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க வாக்குறுதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் பலர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x