Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
விஜயகாந்த்திற்கு அதிக ரசிகர்களைக் கொண்ட மாவட்டம் கடலூர். ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் நடித்த போது, வடலூரில் லாட்ஜில் தங்கியிருந்த அவர், காலை நேரங்களில் எளிய மக்களிடம் இயல்பாய் பேசிப் பழகியவர். அந்த வகையில் அவருக்கு இப்பகுதியில் ரசிகர் பட்டாளம் உருவானது. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த 2005-ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விருத்தாசலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் தொகுதியில் தனது சொந்த செலவில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டார். அதனால் தொகுதி வாசிகளிடம் அவருக்கு ஏற்பட்ட நற்பெயர், தற்போது வரை இருந்து வருகிறது.
விஜயகாந்த் உடல் நலிவுற்றக் காரணத்தால், சென்னையில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கடந்த சில மாதங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக - தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா களம் காண்கிறார். அவரது சகோதரர் சுதீஷ் கரோனா தொற்று காரணமாக சென்னை திரும்பிய நிலையில், பிரேமலதா தனது கட்சி நிர்வாகிகளின் துணையோடு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் தன் கணவர் விஜயகாந்த்தை பிரேமலதா வேனில் அழைத்து வந்தார். அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்.
கூட்டத்தினரைப் பார்த்து, அவரால் பேச முடியவில்லை. எழுந்து நிற்கவும், கையெடுத்துக் கும்பிடவும் மிகவும் சிரமத்திற்குள்ளாவதைக் கண்ட, மக்கள், “எங்க கேப்டன் எப்படி திடமா இருப்பாரு! இப்ப இப்படி இருக்குற நிலையில ஏன் அந்த மனுஷன கூட்டிட்டு வரணும்! பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு!
இந்தம்மாவுக்காவது தெரிய வேணாமா! அவரை இப்படி ஊர் ஊரா கூட்டிட்டு போனா எப்படி உடல்நலன் தேறுவார்” என கூட்டத்திலிருந்தவர்கள் பரிதாபமாக பேசிக் கொண்டனர்.
“கேப்டனைப் பார்க்க கோடி கண்கள் போதாது, அப்படி இருந்தவரை ஓட்டு வாங்குறதுக்காக கண்காட்சியில நிறுத்தன மாதிரி நிறுத்துறப்ப மனசு ரொம்ப வலிக்குது” என்று தொண்டர்கள் குமுறுவதையும் கேட்க முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT