Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
கிராமங்கள் நிறைந்த பகுதியாக உள்ள நத்தம் தொகுதியில் உயர்கல்வி படிக்க ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றப்போவது யார், என்ற கேள்விக்கு இந்த தேர்தலில் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வேட்பாளர்களுடன் மக்களும் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டசபை தொகுதியில் நத்தம் பேரூராட்சி, நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகள், சாணார்பட்டி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், திண்டுக்கல் ஒன்றியத்தில் 4 கிராம ஊராட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
கரந்தமலை, சிறுமலை என மலைகள் சூழ்ந்த பகுதியாக நத்தம் தொகுதி உள்ளதால் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். மா, புளிய மரங்கள் அதிகம் உள்ளது. இவை ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு கணிசமான வருவாயை கொடுக்கிறது. காய்கறிகள் பயிரிடுவது முதல் அனைத்து விவசாயங்களும் செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகவும் நத்தம் தொகுதி உள்ளது. நத்தம் பேரூராட்சியை தவிர அனைத்தும் சிறிய கிராமங்களே.
மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். லிங்கவாடி மலையூர் மலை கிராமத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டோலி கட்டி மருத்துவ மனைக்கு தூக்கிச் செல்லும் அவலம் இன்றும் நீடிக்கிறது.
மாம்பழம் அதிக விளைச்சல் உள்ளதால் கூடுதலாக மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மா விவசாயிகளிடம் உள்ளது. நத்தம் தொகுதியில் உள்ள சந்தனவர்த்தினி ஆறு மணல் திருட்டால் உருக்குலைந்து போய் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் விளைநிலங்களில் உள்ள கிணறுகள் மூலம் தண்ணீர் இறைத்து பாசனம் செய்பவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமலையில் இருந்து வரும் தண்ணீரை தடுக்க சந்தனவர்த்தினி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரி்க்கையும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
கிராமங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் உயர்கல்வி படிக்க ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இதை தற்பொழுது வாக்குறுதியாக போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் கூறிவருகின்றனர். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர் யார் என்பதைத்தான் தொகுதி மக்கள் இந்த தேர்தலில் சுட்டிக்காட்ட உள்ளனர்.
நத்தம் தொகுதியில் 1977-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 11 தேர்தல்களில் (1999 இடைத்தேர்தல்) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.ஆண்டி அம்பலம் தொடர்ந்து ஆறு முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இவரது மறைவுக்குப் பின் நடந்த 1999 இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நத்தம் ஆர்.விசுவநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து வந்த தேர்தல்களிலும் இவரே தொடர்ந்து வெற்றிபெற்றார்.
நத்தம் ஆர்.விசுவநாதனுக்கு கடந்த 2016 தேர்தலில் நத்தம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஷாஜகானை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.ஏ.ஆண்டிஅம்பலம் வெற்றி பெற்றார்.
இந்தமுறை நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக சார்பில் நத்தம் ஆர்.விசுவநாதன் மீண்டும் போட்டியிடுகிறார். மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக, நத்தம் தொகுதியில் மட்டும் எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றது. இதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் நத்தம் தொகுதிக்குட்பட்ட நத்தம் ஒன்றியத்தை அதிமுகவும், சாணார்பட்டி ஒன்றியத்தை திமுகவும் கைப்பற்றியது.
திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலத்துக்கு, அவரது சமுதாய வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் திமுகவினர் உள்ளனர். நத்தம் தொகுதியில் தொடர் வெற்றிபெற்று அமைச்சராக இருந்து, பல திட்டங்களை கொண்டுவந்த நத்தம் ஆர்.விசுவநாதனின் தனிப்பட்ட செல்வாக்கு தங்களைக் காப்பாற்றும் என அதிமுகவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
கடந்த தேர்தலில் இங்கு போட்டியிடாததால் ஏற்பட்ட இடைவெளியை போக்க கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன்.
எளிமையானவர், எப்போதும் சந்திக்கலாம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் திமுகவினர். கடந்த தேர்தலை போல எளிதில் வெற்றிபெற முடியாது என திமுகவினர் கடுமையாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
விட்டதை மீட்டு மீண்டும் தொகுதியை கைப்பற்ற அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இருவரிடையே கடும் போட்டி நிலவும் நிலையில், அமமுக வேட்பாளர் ராஜாவும் களத்தில் உள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவசங்கரன், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார்.
இளைஞர்களின் வாக்குகள் அதிகளவில் கிடைக்கும், கடந்தமுறையைவிட இந்தமுறை கூடுதல் வாக்குகள் பெறுவோம் என்ற விடாமுயற்சியில் இளைஞர்களை திரட்டி அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு ஈடுகொடுத்து தொகுதிக்குள் வலம் வருகிறார். மநீம கூட்டணியில் ஐஜேகே வேட்பாளர் சரண்ராஜ் போட்டியிடுகிறார். ஐந்துமுனைப் போட்டி என்றாலும் அதிமுக, திமுக இடையே கடும்போட்டி நிலவுகிறது. மயிரிழையில் தப்பப்போவது யார் என்பது மக்கள் கையில்தான் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT