Last Updated : 04 Apr, 2021 03:16 AM

 

Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

மாவட்ட எல்லை முதல் மாநில எல்லை வரை நீண்டுள்ள ஆண்டிபட்டி தொகுதி; கூடலூரை கண்டு கொள்ளாத அரசியல் கட்சிகள்: கம்பம் தொகுதியுடன் இணைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி

தேனி மாவட்ட எல்லையில் அமைந்த ஆண்டிபட்டி தொகுதி மாநில எல்லையான கூடலூர் வரை இடம் பிடித்துள்ளது. சுமார் 60 கி.மீ. தூரம் போடி, கம்பம் தொகுதிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் கூடலூரில் தேர்தல் பிரச்சாரம் களையிழந்து காணப்படுகிறது.

ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்டிபட்டி, கடமலை மயிலை போன்ற ஊராட்சி ஒன்றியங்களும், கூடலூர் நகராட்சி, ஆண்டிபட்டி, காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ் ஆகிய பேரூராட்சிகளும் உள்ளது. இதில் ஆண்டிபட்டி தாலுகா, உத்தமபாளையம் தாலுகா (பகுதி), கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி மற்றும் வண்ணாத்திப்பாறை வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளன. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 644 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 94 பேரும் உள்ளனர். மாற்றுப் பாலினத்தவர்கள் 34 பேர் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 772 வாக்காளர்கள் உள்ளனர்.

தேனிக்கு அருகே மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஆண்டிபட்டி தொகுதி மாநில எல்லையான கூடலூர் வரை பரந்து விரிந்து அமைந்துள்ளது. கூடலூருக்கு ஆண்டிபட்டியில் இருந்து கண்டமனூர் அண்ணாநகர் சின்னமனூர் வழியே செல்ல வேண்டும். வழியில் போடி, கம்பம் உள்ளிட்ட தொகுதிகள் குறுக்கிடுகின்றன. இவற்றைக் கடந்தே கூடலூருக்குச் சென்று ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சுமார் 60 கி.மீ.க்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளதால் கட்சி பிரமுகர்கள், முக்கிய பேச்சாளர்கள் யாரும் கூடலூர் பகுதி பிரச்சாரத்திற்கு வருவது கிடையாது.

அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி, இயக்குநர் மனோபாலா ஆகியோர் போடி வரை வந்து சென்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் போடியில் மட்டும் பிரச்சாரம் செய்தார். நடிகை விந்தியா தேனி, போடி, கம்பம், ஆண்டிபட்டியிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போடியிலும், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போடி, தேனி, சின்னமனூர், ஆண்டிபட்டியிலும் பிரச்சாரம் செய்தனர்.

இதே போல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேனி, சின்னமனூரிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். கனிமொழியும், உதயநிதி ஸ்டாலினும் பெரியகுளம், தேனி, போடி, ஆண்டிபட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தனர்.

குறிப்பாக ஆண்டிபட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்ய வரும் கட்சி பிரமுகர்கள் யாரும் எல்லை நகரமான கூடலூருக்கு வந்து வாக்கு சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பொதுவாக அண்டை மாவட்டங்களை ஒருங்கிணைத்தே கட்சித் தலைவர்களின் பிரச்சார பயணம் அமைக்கப்படுகிறது. இதில் தொகுதியின் ஒரு ஊருக்காக நீண்ட தூரம் பயணித்தால் மற்ற இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாது என்பதால் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் விஐபிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் ஆண்டிபட்டியின் பிரதான சாலையில் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்து விடுகின்றனர்.

கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில்தான் முல்லைப் பெரியாறு அணையின் முகத்துவாரம் அமைந்துள்ளது. குழாய் வழியே வரும் நீர் மூலம் இங்கு மின்உற்பத்தியும் செய்யப்படுகிறது. இந்த அணையை கட்டிய ஜான்பென்னி குவிக்கின் மணிமண்டபம் லோயர்கேம்ப்பில் உள்ளது. கண்ணகி கோயில் மலைப்பகுதியும் இங்கு உள்ளது. கூடலூர் ஆண்டிபட்டி தொகுதியின் ஒரே நகராட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடலூரைப் பொறுத்தளவில் 21 வார்டுகள் உள்ளன. 18 ஆயிரத்து 199 ஆண் வாக்காளர்களும், 19 ஆயிரத்து 339 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 37 ஆயிரத்து 541வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளும் அரசியல் பிரமுகர்களின் பிரச்சாரத்தால் களைகட்டி வரும் வேளையில் தொகுதியின் ஓரப்பகுதியில் அமைந்த காரணத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரச்சார நகரமாகவே கூடலூர் இருந்து வருகிறது.

கூடலூர் மட்டுமல்லாது சுற்றியுள்ள குள்ளப்பக்கவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட ஊர்களிலும் பிரச்சாரம் களை இழந்து காணப்படுகிறது.

இருப்பினும் இத்தொகுதியில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன், மகாராஜன் மற்றும் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூடலூர் பகுதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சுயேச்சைகள் இப்பகுதியில் பிரச்சாரம் செய்யாததால் போட்டியிடுபவர்கள் யார் என்பது கூடத் தெரியாத நிலை இப்பகுதி மக்களுக்கு உள்ளது.

பிரச்சாரம் மட்டுமல்ல தங்கள் கோரிக்கை குறித்து மனு கொடுக்கவும் கூடலூர் மக்களுக்கு சிரமமாகவே உள்ளது. குறைந்தது இரண்டு பேருந்துகள் மாறி கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், தேனி உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் கடந்து ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது.

தேர்தலின் போது வேட்பாளர்களின் பிரச்சார வாகனங்கள் போடி, கம்பம் தொகுதியை கடந்து செல்லும் நிலை ஏற்படு கிறது. அப்போது தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி எச்சரிக்கை செய்கின்றனர். ஆண்டிபட்டி தொகுதிக்குள்தான் செல்ல வேண்டும். மற்ற தொகுதிக்குள் நுழையக்கூடாது என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் தொகுதி வரையறை முரண்பாடாக அமைந்துள்ளதால் வேறு வழியின்றி அடிக்கடி இந்த வாகனங்கள் தொகுதி கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.

தேர்தலிலும், அதற்கு பின்பும் பல்வேறு குளறுபடிகளை இந்த தொகுதி யின் மறுசீரமைப்பு ஏற்படுத்தி வருகிறது. கூடலூரில் இருந்து கம்பம் 6 கி.மீ. தூரத்தில் உள்ளதால் வரும் தேர்தலில் கூடலூரை கம்பம் தொகுதியில் இணைக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் மற்றும் பல்வேறு தொடர்புகளுக்கும் உகந்ததாக இருக்கும் என்று அப்பகுதி வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x