Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி

முருகேசன் (திமுக) பரமக்குடி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட் டணிக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக் குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 தொகுதிகளிலும் 72 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.

பரமக்குடி தொகுதி

பரமக்குடி(தனி) தொகுதியில் 126068 ஆண்கள், 128298 பெண்கள், 15 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 254381 பேர் உள்ளனர். இத்தொகுதியில் என்.சத ன்பிரபாகர் (அதிமுக), செ.முருகேசன் (திமுக), செல்வி (தேமுதிக), சசிகலா (நாம் தமிழர்), கருப்பு ராஜா (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட 15 பேர் போட்டி யிடுகின்றனர். இங்கு அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் தங்கள் கட்சி ஆதரவு வாக்குகளைப் பெற போராடி வரு கின்றனர்.

அதிமுக வேட்பாளரான சதன் பிரபாகர் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பதால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கரோனா காலத்தில் மக்களுக்கு காய்கறி, அரிசி கொடுத்து உதவினார். அதனால் அவருக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர் முருகேசன் எம்எல்ஏ தேர்தலுக்கு புதியவர் என்றாலும், ஏற் கெனவே ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளை வகித்து, போகலூர் ஒன்றியத்தில் நன்கு அறிமுகமானவராக உள்ளார். அதிமுக வேட்பாளர் கடந்த காலத்தில் செய்த சாதனைகள் மற்றும் தற்போது அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வாக்கு கேட்கிறார். திமுக வேட்பாளரோ திமுகவின் தேர்தல் அறிக்கையை கூறியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல ஆட்சி தருவார் எனக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார். இருதரப்புக்கும் சாதக, பாதகமில்லாத நிலையே உள்ளது.

திருவாடானை

திருவாடானை தொகுதியில் 143967 ஆண்கள், 143888 பெண்கள், 20 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 287875 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் ஆணிமுத்து (அதிமுக), கரு. மாணிக்கம் (காங்கிரஸ்), வ.து.ந.ஆனந்த் (அமமுக), எஸ். ஜவஹர் (நாம் தமிழர்), பி.சத்தியராஜ் (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ், அதிமுக, அமமுக இடையே போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் அமமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு அக்கட்சி ஓட்டுகள் மற்றும் தொண்டி, காரங்காடு, முள்ளிமுனை போன்ற கடற்கரை பகுதி மக்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அதனால் இவரும் களத்தில் சரியான போட்டியை கொடுத்து வருகிறார். அதேநேரம் காங்கிரஸ் வேட்பாளருக்கும், அதிமுக வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் இளைஞர், இத்தொகுதிக்கு புதியவர் என்றாலும், இவரது தாத்தா கரிய மாணிக்கம் அம்பலம் இத்தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாகவும், இவரது தந்தை கே.ஆர். ராமசாமி இத்தொகுதியில் 5 முறையும் எம்எல்ஏவாகவும் இருந்ததால் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளை வகித்த ஆணிமுத்து இத்தொகுதியில் நன்கு அறிமுகமானவர். ஆனால் கட்சியினருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் தேர்தல் பணியாற்ற பணம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதி

ராமநாதபுரம் தொகுதியில் 151772 ஆண்கள், 154579 பெண்கள், 21 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 306372 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் டி.குப்புராமு (பாஜக), காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக), ஜி.முனியசாமி (அமமுக), கண்.இளங்கோ (நாம் தமிழர்), கே.பி.சரவணன் (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட 19 பேர் போட்டியிடுகின்றனர். இதில் திமுக, பாஜக வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அமமுக வேட்பாளரான முனியசாமி அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர். தற்போது அமமுக அமைப்புச் செயலாளராக உள்ளார். இவர் தான் சார்ந்த அகமுடையார் இன ஓட்டுகளை குறிவைத்துள்ளார். பாஜக வேட்பாளர் அதிமுகவின் ஓட்டுகளை அதிகம் நம்பியுள்ளார். ஆனால் அதிமுகவினர் முழுமையாக தேர்தல் பணியாற்றவில்லை என்ற புகாரும் உள்ளது.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் தொகுதியில் 154536 ஆண்கள், 154367 பெண்கள், 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 308912 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் கீர்த்திகா முனியசாமி (அதிமுக), ராஜ கண்ணப்பன் (திமுக), எம்.முருகன் (அமமுக), ரஹ்மத் நிஷா (நாம் தமிழர்), நவ.பன்னீர் செல்வம்(சமத்துவ மக்கள் கட்சி) உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது.

அமமுக வேட்பாளர் கணிசமான வாக்குகளை பெற்று விடும் நிலை உள்ளது. அதேசமயம் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி, திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x