Published : 03 Apr 2021 09:19 PM
Last Updated : 03 Apr 2021 09:19 PM
பொதுக்கூட்ட மேடை ஏறாமல் வேனில் இருந்து பேசியபடி புதுச்சேரியில் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி வாரியாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்வதாக இருந்தது.
நேரமின்மையால் ஒரே இடத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஏஎப்டி திடலில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை தயாரானது.
பொதுக்கூட்ட மேடையில் திமுக கூட்ட நிகழ்வுகளில் நடக்கும் பிரச்சார கச்சேரி நடந்தது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடங்கி காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணிக்கட்சித்தலைவர்கள் மேடையில் காத்திருந்தனர்.
மேடையில் வேட்பாளர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஸ்டாலின் வருவது அறிவிக்கப்பட்டவுடன் முன்வரிசையில் வேட்பாளர்கள் வந்து அமர்ந்தனர். ஆனால் மு.க. ஸ்டாலின் மேடை ஏறவில்லை.
பிரச்சார வேனில் வந்த ஸ்டாலின் மேடையில் இருந்த தலைவர்களையும், வேட்பாளர்களையும் பார்த்து கை அசைத்தார். மேடைக்கு ஸ்டாலின் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வேனில் இருந்த படியே பிரச்சாரத்தை 25 நிமிடங்களில் நிறைவு செய்து விட்டு உடனடியாக புறப்பட்டார்.
மேடையில் இருந்த தலைவர்களையோ, வேட்பாளர்களையோ கூட்டம் நடைபெறும் இடத்தில் சந்திக்கவில்லை. நேரடியாக விமான நிலையம் சென்ற ஸ்டாலின் சென்னைக்கு தனி விமானத்தில் புறப்பட்டதாகத் தெரிவித்தனர்.
மேடையில் அதிகமானோர் இருந்ததால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மேடை ஏறுவதைத் தவிர்த்தாரா என்று விசாரித்தபோது, அடுத்தடுத்து நிகழ்வுகள் இருப்பதால் மேடை ஏறாமல் விரைவாகப் பேசி விட்டு புறப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT