Published : 03 Apr 2021 08:53 PM
Last Updated : 03 Apr 2021 08:53 PM
இந்து மக்களின் ஒன்றுமையால் நாத்திகம் பேசுவதைக் கொள்கையாகக் கொண்ட மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தி வாக்கு கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார் என குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஜே.பி.நட்டா பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அருமனையில் இன்று மாலை பாரதிய ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் குஞ்சாலுவிளையில் இருந்து அருமனை சந்திப்பு வரை பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் திரண்ட கூட்டத்திற்கு மத்தியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனத்தில் ஊர்வலமாக வந்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பொன்ராதாகிருஷ்ணன், விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் ஜெயசீலன் ஆகியோருக்கு வாக்குகள் கேட்டார். ஊர்வலம் அருமனை சந்திப்பை அடைந்ததும் அங்கு கூடிநின்ற தொண்டர்கள் மத்தியில் ஜே.பி.நட்டா பேசினார்.
அவர் பேசுகையில்; கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயசீலன் ஆகிய இருவயையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்.
இங்கு கூடியுள்ள பெரும் கூட்டம், நீங்கள் கொடுக்கும் கைதட்டல், வரவேற்பு போன்றவை பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது. கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலிலும், விளவங்கோடு சட்டப்பேரவையிலும் பாரதிய ஜனதா பெரும் வெற்றிபெறும் என நம்புகிறேன். இந்த இரு வேட்பாளர்களையும் எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியினரின் மனநிலை குழம்பியுள்ளனர்.
காங்கிரஸும், திமுகவும், 2ஜி, 3ஜி, 4ஜி என ஊழலையும், வாரிசு அரசியலையுமே கொடுத்துள்ளனர். 2ஜி என்பது முரொசொலி மாறம், மற்றும் அவரது மகன்கள், 3ஜி என்பது கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், 4ஜி என்பது ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி. இவர்கள் அனைவருக்குமே மக்கள் நலன் என்பது கிடையாது.
சுயநலமே முக்கியம். காங்கிரஸும், திமுகவும் ஜல்லிகட்டை மீட்டெடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இதை பாஜக, அதிமுகவினரே போராடி மீண்டும் பெற்றுத் தந்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவுபெற்ற கறுப்பர்கூட்டம் கடவுள் முருகனை இழிவுபடுத்திப் பேசினர். ஆனால் நமது இந்து மக்கள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து எதிர்ப்புகளை பதிவு செய்ததன் விளைவாக, இந்துக்களின் ஒற்றுமையால் தற்போது ஸ்டாலின் வேல் ஏந்தும் நிலைக்கு வந்துவிட்டார். நாத்திகம் பேசுவதைக் கொள்கையாகக் கொண்டவர்கள் ஆத்திகம் கூறி வாக்கு கேட்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.
தமிழகத்தில் விளவங்கோடு தொகுதி ரப்பர் விவசாயம் அதிகம் கொண்டது. இங்கு ரப்பர் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும். இதைப்போல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனைத்து சிகிச்சை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.
தொண்டர்களுடன் இணைந்து வெற்றிவேல்... வீரவேல் கோஷமிட்ட நட்டா
மாலை 6.30 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்துகொண்டு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்வதற்கு நட்டா முடிவு செய்திருந்தார். ஆனால் அருமனையில் நடந்த பிரச்சார ஊர்வலத்தில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு பாஜக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் உற்சாகமடைந்த அவர், 1 மணி நேரத்திற்கு மேல் ஊர்வலம் முடியும் அருமனை சந்திப்பை அடைந்தார்.
அப்போது, இரவு வந்துவிட்டதால், தொண்டர்கள் மத்தியில் பொறுமையாகப் பேசிவிட்டு, தரைவழியாக காரில் திருவனந்தபுரம் செல்வதாக தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
திறந்த வாகனத்தில் நின்றவாறு பூக்களைத் தொண்டர்கள் மீது வாரியிறைத்து வெற்றிவேல்... வீரவேல் கோஷத்தைப் பலமுறை உரக்கக்கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT