Published : 03 Apr 2021 08:03 PM
Last Updated : 03 Apr 2021 08:03 PM

அன்புமணியின் பிரச்சாரம் சேவூர் ராமச்சந்திரனுக்கு கை கொடுக்குமா? வன்னியர்களின் வாக்குகள் கிடைக்குமா?

திருவண்ணாமலை 

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசின் பிரச்சாரம் கைக்கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.

இவரை எதிர்த்து, திமுக சார்பில் அன்பழகன் என்பவர் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக ஆட்சி மற்றும் சேவூர் ராமச்சந்திரன் மீதான மக்களின் அதிருப்தியைக் காண முடிந்தது.

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், பட்டு ஜவுளி பூங்கா தொடங்க வேண்டும், புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும், திண்டிவனம் – நகரி இடையேயான புதிய ரயில் பாதை திட்டத்தை விரைவுப்படுத்தி நிறைவேற்றி கொடுக்க வேண்டும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய தொழில் கொள்கைகளை உருவாக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுவே மக்களின் அதிருப்திக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கியது போல், திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கது ஏன்? என்ற கேள்வியை மக்கள் எழுப்பினர்.

மக்களின் தொடர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், ஆரணியில் பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி, ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு என்பது, சேவூர் ராமச்சந்திரனுக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருந்தாலும், ஆட்சியில் இருந்தபோது ஏன்? செய்து கொடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் பிரச்சாரத்துக்கு இணையாக திமுக வேட்பாளர் அன்பழகனும் சுழன்று வருகிறார். முதல் முறையாக களம் காண்பதால், அவர் மீது தனிப்பட்ட விமர்சனம் எழவில்லை. ஆரணியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளதால், திமுக தலைவர் ஸ்டாலினும் தனது தொகுதியில் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்ப்பு அவரிடம் இருந்துள்ளது. ஆனால், திருவண்ணாமலைக்கு வர வழைத்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளதால், அன்பழகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பாமக ஒத்துழைப்பு இல்லை

முதலியார், வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் அதிகம் உள்ள ஆரணி தொகுதியில், அவர்களது வாக்குகளே முடிவை தீர்மானிக்கிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் இடம்பெற்றுள்ளதால், பட்டியலினத்தவர்களின் வாக்குகள், திமுகவுக்கு கணிசமாக கிடைக்கலாம்.

பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்கள் என்பதால், சிறுபான்மையின மக்களின் வாக்குகளும் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரான அன்பழகனுக்கு, அந்த சமூகத்தினரின் வாக்குகளும் பரவலாக கிடைக்கலாம். மேலும், பாமகவின் முழுமையான ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவும், அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளை பிரிக்கக்கூடும் என கணக்கிடப்படுகிறது.

இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம்

இப்படியாக, பல வகையில் நெருக்கடியை சந்தித்துள்ள சேவூர் ராமச்சந்திரனுக்கு, தனது செங்குந்த முதலியார் சமூக வாக்குகள் முழுமையாக கிடைக்குமா? என தெரியவில்லை. இதனால் வன்னியர்கள் வாக்குகளை பெற, பாமக நிறுவனர் ராமதாசின் பிரச்சாத்துக்கு சேவூர் ராமச்சந்திரன் காய்களை நகர்த்தி உள்ளார்.

அதில், தனது உடல் நிலையைக் காரணமாகக் கூறி ராமதாஸ் தவிர்த்ததாக தெரிகிறது. இதனால் ராமதாசுக்கு மாற்றாக, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசை வரவழைத்து நேற்று பிரச்சாரம் செய்துள்ளார். அவரது பிரச்சாரத்தில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் பழனிசாமி, முதல்வராக மீண்டும் வர வேண்டும், அதற்கு ஆரணியில் சேவூர் ராமச்சந்திரன் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அதிமுக வேட்பாளர் சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்துள்ளார் என புகழாரம் சூட்டினார். அன்புமணியின் பிரச்சாரம், வன்னியர்களிடையே எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என மே 2-ம் தேதி வரை காத்திருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x