Published : 03 Apr 2021 08:11 PM
Last Updated : 03 Apr 2021 08:11 PM
''பொதுத்துறை பங்குகளைத் தனியாருக்கு விற்கும்போது பங்குதாரர்கள் ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகளில் ஏற்கெனவே அங்கு வேலையில் இருப்பவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்தால் போதும். இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்று கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இதை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்'' என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்ற பிறகு அவற்றில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்று பாஜக அரசு முதலீட்டாளர்களிடம் கூறியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கு பாஜக அரசு முடிவு செய்துவிட்டதையே இது காட்டுகிறது.
சமூக நீதிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரான பாஜகவின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறோம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில் பாஜக அரசு மும்முரமாக உள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்கப்போவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இப்படித் தனியாருக்குப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ற பிறகு அந்த நிறுவனங்களில், 'இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை. எனவே, நீங்கள் தாராளமாக முதலீடு செய்யுங்கள்' என்று தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
பங்குதாரர்கள் ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்படும்போது ஏற்கெனவே அங்கு வேலையில் இருப்பவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்தால் போதும். இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்று கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொல்லப்பட்டிருப்பதாக முதலீடு மற்றும் பொதுவள மேலாண்மைத் துறையின் (Department of Investment and Public Asset Management -DIPAM) சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது என அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் மோடி அரசு இப்போது இட ஒதுக்கீட்டை முற்றாக அழித்தொழிக்க முடிவு செய்திருப்பது அப்பட்டமான சனாதன நடவடிக்கையே ஆகும்.
இட ஒதுக்கீடு என்பது ஆட்சியாளர்கள் வழங்கும் சலுகை அல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட உரிமை ஆகும். அதைப் பறிப்பதற்கு முடிவெடுத்துள்ள பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் இந்தத் தேர்தலில் சரியான பாடத்தைத் தமிழக மக்கள் புகட்ட வேண்டும். இட ஒதுக்கீடு என்னும் சமூக நீதியைக் காக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்''.
இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT