Published : 03 Apr 2021 07:35 PM
Last Updated : 03 Apr 2021 07:35 PM
தமிழகத்தில் பாஜக அதிமுக அணி துரோகக் கூட்டணி, புதுச்சேரியில் வேஸ்ட் கூட்டணி- நாங்கள்தான் பெஸ்ட் கூட்டணி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பொதுக்கூட்ட மேடை ஏறாமல் வேனில் இருந்தபடி ஸ்டாலின் இன்று மாலை பேசியதாவது:
தமிழகத்தில் 234 தொகுதிகளில் 55 கூட்டங்களில் பேசிவுள்ளேன். இன்று 56வது கூட்டத்தில் பேசுகிறேன். தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் மதச்சார்பற்ற அணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது. அதுபோல் புதுச்சேரியிலும் வெற்றியைத் தேடி தர வேண்டும்.
ஐந்து ஆண்டுகால மத்திய பாஜக அரசு கடந்த காங்கிரஸ்-திமுக ஆட்சிக்கு ஆளுநரை வைத்து தொல்லை கொடுத்தார்கள் என்பதை மறுந்து விடக்கூடாது.
ஆளுநர் மூலம் அரசை மட்டும் அல்ல மக்களுக்கும் மத்திய அரசு தொல்லை தந்தது. தொல்லை தந்த பாஜகவை புதுச்சேரியின் உள்ளே வரவிடக்கூடாது.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுக தலைமையிலான அணி வெல்லும். இதுதொடர்பாக தொடர் செய்தி வருகிறது. அதனால் மத்தியில் உள்ள பாஜக அரசானது, நமது கட்சியையும், கூட்டணியையும் சோர்வடையவும், முடக்கிவைக்கவும் திட்டமிட்டது.
எனது மகள் வீட்டில் ரெய்டு நடந்தது. அந்த ரெய்டு பற்றி நான் கவலைப்படவில்லை. அதேபோல் திருவண்ணாமலையில் வேலு, கரூரில் செந்தில்பாலாஜி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. வருமானவரி சோதனைகளைப் பார்த்து அதிமுக பயந்து காலில் விழலாம். திமுக எப்போதும் பயப்படாது.
நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கொள்கை
புதுச்சேரியில் கிரண்பேடி என்ற ஆளுநரால் பல சொல்ல முடியாத தொல்லைகளைத் தந்தார்கள். மக்கள் நலத்திட்டங்களை முடக்கினர். மக்களிடத்தில் வெறுப்பு அதிகரித்ததால் கிரண்பேடியை நீக்கியுள்ளனர். மக்கள் மறந்து விடுவார்கள் என்று பாஜக நினைக்கிறது. ஐந்து ஆண்டுகளாக தொல்லை தந்த பாஜகவை மறக்க முடியுமா
கடந்த இரு மாதங்களாக பாஜக அமைச்சர்களையும், சபாநாயகரையும், கட்சியினரையும் மிரட்டினர். தற்போது பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி வைத்து மக்களிடத்தில் வருகிறார்கள். நம்பவைத்து ஏமாற்றுவதுதான் இந்த மூன்று கட்சிகளின் கொள்கை.
பிரதமர் மோடியின் எண்ணமே, பாஜகவை தவிர்த்து இதர கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இதர மாநிலங்களில் இருக்கக்கூடாது என்பதே எண்ணம். அவர்கள் நிம்மதியாக ஆட்சி செய்யக்கூடாது என்று நினைக்கிறார்.
பல மாநிலங்களில் பெரும்பான்மை இருந்தும் ஆட்சிகளை பாஜக கவிழ்த்துள்ளது.
வரும் தேர்தலில் பாஜகவால் கலைக்க முடியாத அளவுக்கு பெரும்பான்மை வரவேண்டும். ஜனநாயக முறையில் தேர்வு செய்யும் அரசுகளை கவிழ்ப்பது தான் மோடியின் பாஜகவின் கொள்கை.
மக்களின் மீது பாஜகவுக்கு அக்கறை இருந்தால் மக்களுக்கு தேவையானதை செய்யவேண்டும். பாசிச முறையில் மிரட்டல் பணிகளை செய்கிறார்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மொத்தமாகவே 19 ஆயிரம் வாக்குகள்தான் பெற்றது. தற்போது ரங்கசாமியையும், அதிமுகவையும் மிரட்டி பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் பாஜக அதிமுக அணி துரோக அணி என்றால் புதுச்சேரியில் வேஸ்ட் கூட்டணி . எங்களின் அணிதான் பெஸ்ட் கூட்டணி.
புதுச்சேரியில் தேர்தலில் வென்றால் நான்தான் முதல்வர் என ரங்கசாமி கூறுகிறார். ஆனால் இருமுறை புதுச்சேரி வந்த பிரதமர் மோடி முதல்வர் ரங்கசாமி என அறிவிக்கவில்லை. தேர்தல் முடிந்தால் என்ன நடக்கும் என்பது ரங்கசாமிக்கும், அதிமுகவுக்கும் தெரியும்.
ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தில் நடவடிக்கை
அதிமுக ஆட்சி நடக்கும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் பொள்ளாச்சி விவகாரத்தை மறந்து விட்டார். அச்செய்தி அறியாவிட்டால் நீங்கள் பிரதமராக இருக்க லாயக்கில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தை நான் விடமாட்டேன். அதேபோல் தமிழகத்தில் காவல்துறையில் பெண் உயர் அதிகாரிக்கே பாலியல் துன்புறுத்தல் நடந்தது பிரதமருக்கு தெரியாதா?
புதுச்சேரிக்கு வந்த பிரதமரிடம் மாநில அந்தஸ்து, ரூ. 8800 கோடி கடன் தள்ளுபடி பற்றி ரங்கசாமி ஏன் மேடையில் கோரிக்கை வைக்கவில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்று பிரச்சாரத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் பட்ஜெட்டில் அறிவித்து பிரதமர் அடிக்கல் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் கொண்டு வரப்படவில்லை. எப்பணியும் நடக்கவில்லை. மாநிலமும், மத்தியில் ஒற்றுமையாக இருந்ததால் தமிழகத்தில் ஏதாவது மத்திய அரசு செய்துள்ளதா என பார்க்கவேண்டும்.
புதுச்சேரி இயற்கை வளத்தை அபகரிக்க பாஜக திட்டம்
புதுச்சேரி இயற்கை வளத்தை சாகர்மாலா திட்டத்தின் மூலம் அபகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அமையும் ஆட்சி திட்டங்களை புதுச்சேரியிலும் நிச்சயம் செயல்படுத்துவோம்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்த உள்ள குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் மாதம் புதுச்சேரியிலும் வழங்கப்படும். மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, காவிரி நீர் உரிய பங்கை பெறுதல், காரைக்கால் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து சிறப்பு நிதி, தமிழகம் - புதுச்சேரி இணைப்பு சாலைகள், மேம்பாலங்கள் அமைப்போம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT