Last Updated : 03 Apr, 2021 06:46 PM

11  

Published : 03 Apr 2021 06:46 PM
Last Updated : 03 Apr 2021 06:46 PM

காங்கிரஸ், திமுக ஊழலில் திளைத்த கட்சிகள்: பாஜக தேசியச் செயலாளர் ஜே.பி.நட்டா பேச்சு

காரைக்குடியில் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பேசிய தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா.

காரைக்குடி

‘‘காங்கிரஸ், திமுக ஊழலில் திளைத்த கட்சிகள்,’’ என பாஜக தேசியச் செயலாளர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அத்தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

பாரம்பரிய மிக்க மண்ணில் பேசுவதில் பெருமிதம். தமிழ் மொழி உலகின் பழமையான மொழி. அது முழுமையான இலக்கணத்தை உடையது. பிரதமர் மோடி ஐ.நா., சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பேசி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.

தமிழகத்தில் அதிமுக, பாஜக இணைந்து தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க முயற்சிக்கிறது. ஆனால், எதிர்கட்சி குடும்ப அரசியல் செய்ய நினைக்கிறது. அக்கட்சி மூன்றாவது முறையும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் திமுக ஊழலில் ஊறித் திளைத்தவை. 2 ஜி என்றால் இரண்டு தலைமுறை மாறன் குடும்பம். 3 ஜி என்றால் 3 தலைமுறை கருணாநிதி குடும்பம். 4 ஜி என்றால் காங்கிரஸில் நேரு குடும்பம். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இது மதவாத ரீதியான கூட்டணி. ஆனால் எங்களை மதவாத கட்சி என்கின்றனர். நாங்கள் மதவாத கட்சி கிடையாது.

திமுகவினர் பெண்களை இழிவாக பேசி வருகின்றனர். ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்தபிறகு எப்படி பேசுவார்கள். காங்கிரஸ் கட்சி உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதிக்கிற கட்சி இல்லை. அவர்கள் ஆட்சியில் தான் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மோடி ஆட்சியில் யாரும் சுட்டுக் கொல்லப்படவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. பிரதமர் மோடி உள்ளூர் மக்களின் உணர்வுகளை புரிந்து தடையை நீக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் தான் இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களின் வாழ்விடங்களை குண்டு போட்டு அளித்தது. மோடி இலங்கைக்கு சென்று தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார்.

தமிழர்களின் ஆன்மீக உணர்வுகளைப் புரிந்து கொண்ட கட்சி பாஜக. கருப்பர் கூட்டம் கந்த சஷ்டியை கேலி செய்தபோது ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. நாம் வேல் யாத்திரை நடத்தினோம். அதன் விளைவாக ஸ்டாலினை வேல் தூக்க வைத்தோம்.

பொருளாதார ரீதியாக மோடி அரசு தமிழகத்திற்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. 13-வது நீதிக்குழு மானியத்தில் ரூ.94 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் 14 வது நிதிக்குழு மானியத்தில் ரூ.5.30 லட்சம் கோடி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சாலை மேம்பாட்டுக்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மோடி அரசு செய்தது போல் வேறு எந்த அரசும் செய்தது இல்லை.

மோடி எப்போதெல்லாம் தமிழகத்திற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு தருகிறார். தமிழக பாரம்பரிய பட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரூ.1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.

டிஎம்கே என்றால் ‘டி பார் டைனஸ்டி’ அதாவது வாரிசு அரசியல், ‘எம் பார் மணி’ ‘சி பார்’ கட்ட பஞ்சாயத்து. இந்த மூன்றையும் பிரதிபலிக்கும் திமுகவை புறக்கணிப்போம்.

நீண்ட கால பழக்கமுள்ள ஹெச்.ராஜாவை வெற்றி பெற வைப்போம், என்றார். மத்திய அமைச்சர் வி.கே.சிங்., உடனிருந்தார். முன்னதாக ஜே.பி.நட்டாவிற்கு வேல், வீரவாள் பரிசாக வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x