Published : 03 Apr 2021 05:45 PM
Last Updated : 03 Apr 2021 05:45 PM
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி எம்ஜிஆர். ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்.
மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் பாடுபடுகின்றன. ஆனால் தங்கள் குடும்ப வளர்ச்சிக்காக திமுகவும், காங்கிரஸும் பாடுபடுகின்றன என்று திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரன், நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் கணேசராஜா ஆகியோருக்கு ஆதரித்து திருநெல்வேலியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
கோயில் நகரமாகிய திருநெல்வேலிக்கு வந்திருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இந்த பூமி தர்ம பூமி, மோட்ச பூமி. ஆங்கிலேயரை எதிர்த்து போராடியி வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி செல்லும் இடங்களில் எல்லாம் நான் பேசிவருகிறேன்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். இந்தத் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டி எம்ஜிஆரின் ஆட்சியை கொண்டுவர வேண்டும். இந்த தேர்தலில் மோடி தலைமையில தேசிய ஜனயாக கூட்டணிக்கும், ராகுல் தலைமையில் முற்போக்கு கூட்டணிக்கும் இடையேதான் போட்டி.
சாதாரணமாக டீ விற்ற மோடி இன்று உலகமே பாராட்டும் பிரதமராக உயர்ந்துள்ளார். அதுபோல் சாதாரண ஏழை விவசாயி மகனாக பிறத்து தனது உழைப்பால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியுள்ளார்.
நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி என்று நான்கு தலைமுறைகளாக காங்கிரஸில் கோலோச்சுகிறார்கள். திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என்று 3 தலைமுறைகளாக பதவி வகிக்கிறார்கள். உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். எனவே இந்த தேர்தல் மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் நடைபெறும் யுத்தம்.
திமுக குடும்ப கட்சி, பணக்கார கட்சி, ஆனால் பாஜக ஏழைகளை மையமாக வைத்து வளர்ந்துள்ளது. பிரதமருக்கு மீனவர்கள், விவசாயிகள், ஏழைகள் பற்றி பிரதமர் கவலைப்படுகிறார். ஆனால் ஸ்டாலினுக்கு தனது மகனை பற்றி மட்டும் தான் கவலை, மகனை முதல்வராக்க வேண்டும் என்ற கவலை. ஸ்டாலினிடம் கோபமும் ஊழலும் வளர்ந்து வருகிறது.
எப்போதும் துண்டுசீட்டுகளை பார்த்துதான் பேசுகிறார். இறந்தவர்களை குறித்து விமர்சிப்பது தமிழர்களின் பண்பாடு கிடையாது. ஆனால் அருண்ஜேட்லி, சுஷ்மாசுவராஜ் ஆகியோரை திமுகவினர் நிந்திக்கிறார்கள். திமுக தலைவர்கள் காமராஜரையும் இழிவாக பேசுகிறார்கள். தமிழக முதல்வரின் தாயாரை கேவலப்படுத்தியுள்ளனர். எனவே தமிழக பெண்கள் திமுகவுக்கு வாக்களிக்க கூடாது.
நாட்டின் பிரதமரும் தமிழக முதல்வரும் சாதாரண மக்களை பற்றி கவலைப்படக் கூடியவர்கள். விவசாயிகள், சுயஉதவி குழுக்களின் கடனை ரத்து செய்து தமிழக முதல்வர் சாமானிய மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறார். நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசு தலைவர் பதவியில் பட்டியலினத்தவரை வைத்து பாஜக அழகு பார்க்கிறது.
பல்வேறு பிரிவுகளாக இருந்த பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை ஒரே பிரிவாக தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தீர்மானத்துக்கு வந்தபோது திமுகவும் காங்கிரசும் வெளிநடப்பு செய்தன.
தமிழ் மொழி மீதும், தமிழ் பண்பாட்டின்மீதும் பிரதமர் ஈடுபாடு கொண்டவர். தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றியிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கான தடையை பாஜகவும், அதிமுகவும் நீக்கின. ஆனால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை தடை செய்து விடுவார்கள். 2014-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது.
பிரதமராக மோடி பொறுப்பேற்றபின் நாட்டில் எந்த கலவரங்களும் நடைபெறவில்லை. இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டுள்ளோம். இலங்கையில் தமிழர்களுக்கு வீடு கட்டித்தரப்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கரோனோ காலத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதுபோல் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 30,000 கோடியை மோடி ஒதுக்கியுள்ளார். சாகர்மாலா திட்டத்துக்கு ரூ.2.15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டப்படவுள்ளது. .
ஒட்டுமொத்த தமிழகத்தின் முழு வளர்ச்சிக்கும் அதிமுக பாஜக கூட்டணி பாடுபடுகிறது. ஆனால் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சிகளா காங்கிரசும் திமுகவும் உள்ளன.
இதை தமிழக மக்கள் உணர்ந்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாளையங்கோட்டை, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் பங்கேற்கவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT