Last Updated : 03 Apr, 2021 06:55 PM

2  

Published : 03 Apr 2021 06:55 PM
Last Updated : 03 Apr 2021 06:55 PM

தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்த வானொலி வழி பிரச்சார வாய்ப்பு; பயன்படுத்திக் கொள்ளாத அரசியல் கட்சிகள்

காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையம்.

காரைக்கால்

இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்த அகில இந்திய வானொலி வழியிலான தேர்தல் பிரச்சார வாய்ப்பை புதுச்சேரியில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தேர்தல் செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மின்னணு ஊடகங்களில் பிரச்சாரக் கள வாய்ப்பு அமைய வேண்டும் என்ற பல்வேறு கருத்துகள் நிலவிய சூழலில், அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் மூலம் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை, இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொடுத்தது.

தற்போது கரோனா பரவல் சூழலில் மக்களை நேரடியாகச் சந்திப்பதில், பிரச்சாரம் மேற்கொள்வதில் இடர்ப்பாடுகள் இருக்கும் என்பதால், தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வானொலி வழி பிரச்சாரத்துக்கான நேரத்தை இரண்டு மடங்காக அதிகரித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

அதனடிப்படையில் புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம், தேர்தல் பிரச்சார ஒலிபரப்பு மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்.3-ம் தேதி வரை செய்யப்பட்டது. அதனை காரைக்கால் வானொலி (பண்பலை ஒலிபரப்பு) நிலையமும் ஒலிபரப்பியது. ஆனால், பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வேதனையான விஷயம்.

வானொலியில் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஒலிபரப்பு முறை குறித்து, புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் கண்ணையன் தெட்சணாமூர்த்தியிடம் கேட்டபோது, அவர் 'இந்து தமிழ் திசை'யிடம் கூறியதாவது:

"இந்த முறை, அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்புக்கான நேரத்தை தேர்தல் ஆணையம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, வானொலி ஒலிபரப்புக்காக மொத்தம் சுமார் 35 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. தேசிய, மாநில கட்சிகள் அனைத்துக்கும் அடிப்படை நேர வாய்ப்பாக 90 நிமிடங்கள் அளிக்கப்படுகின்றன. தவிர ஒவ்வொரு கட்சிக்கும் முந்தைய தேர்தலில் பெற்ற வாக்கு விகிதத்தின் அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது.

மாநிலத் தேர்தல் அலுவலகத்தில், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வானொலி நிலைய அதிகாரிகள் முன்னிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்குமான ஒலிபரப்பு நாட்கள், நேரங்கள் ஆகியவை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. நாள், நேரம் குறித்த விவரங்கள் அந்தந்த அரசியல் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் மூலமாகவும், வானொலி நிலையம் மூலமாகவும் அனுப்பப்படும்.

அதன் பின்னர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வானொலியில் பேசவுள்ள குறிப்புகளை எழுத்துபூர்வமாக (ஸ்கிரிப்ட்) அளிக்க வேண்டும். அதற்கென அமைக்கப்பட்டிருக்கும் குழு ஸ்கிரிப்ட்டுக்கு ஒப்புதல் அளித்த பின்னர், ஒலிப்பதிவு செய்யப்பட்டு வானொலி மூலம் ஒலிபரப்பு செய்யப்படும். இவை அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் நேரடி வழிகாட்டுதலின் அடிப்படையில் செய்யப்படுகிறது.

அந்த வகையில் புதுச்சேரி வானொலியில் இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஒலிபரப்பில் பங்கேற்றுப் பேசினர்".

இவ்வாறு கண்ணையன் தெட்சணாமூர்த்தி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வானொலி வாயிலாக 'மன் கி பாத்' உரை மூலம் மக்களோடு பேசி வருகிறார். ஆனால், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் வானொலி பிரச்சாரக் களத்தை கரோனா பரவல் சூழலிலும் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு நாளைக்கு சுமார் மூன்றரை மணி நேரம் தேர்தல் ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பல அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தால், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரங்களில் வானொலியில் வாத்திய இசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்ததை நேயர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

புதுச்சேரியின் இரண்டாவது பெரிய பிராந்தியமான காரைக்காலில், வேறு எந்தத் தனியார் வானொலியும் இல்லாத நிலையில், காரைக்கால் பண்பலை வானொலி மட்டுமே மக்களிடம் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருந்தால் தங்கள் பிரச்சாரக் கருத்துகளை எளிதாக அதிக மக்களிடையே கொண்டு சேர்த்திருக்க முடியும். அதே சமயம், தமிழகத்தில் சென்னை வானொலி மூலம் ஒலிபரப்பான தேர்தல் ஒலிபரப்பில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் பங்கேற்று நன்கு பயன்படுத்திக் கொண்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x