Published : 03 Apr 2021 04:14 PM
Last Updated : 03 Apr 2021 04:14 PM
இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மத்தியில் மோடி ஆட்சிக்கு எச்சரிக்கை மட்டுமல்ல, அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கும் தொடக்கமாக இருக்கப்போகிறது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து இன்று (ஏப். 03) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பிரச்சாரம் செய்தார்.
அதன்பின்னர், முதலியார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது ஒவ்வொரு நாளும் உறுதியாகிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவதும் உறுதியாகி வருகிறது.
புதுச்சேரியில் தேர்தல் நெருக்கத்தில், 144 தடை உத்தரவை அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்தைத் தடுத்து, தேர்தல் பணியை முடக்கும் வகையில் இத்தடை போடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் தேர்தலுக்காக அதிகார துஷ்பிரயோகமும், பணம் விநியோகமும் அதிக அளவில் உள்ளதாகத் தகவல் வருகிறது.
எனவே, தேர்தல் ஆணையம், சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும். ஏற்கெனவே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதில் குழப்பம், அவற்றை வாக்குப்பதிவின் போது பயன்படுத்துவதில் குளறுபடிகள் போன்ற பல்வேறு ஐயங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கணக்கில்கொண்டு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்.
புதுச்சேரியில் இது ஒரு முக்கியமான தேர்தல். புதுச்சேரி மாநில அந்தஸ்துக்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தொடர்ந்து மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. மாநில நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.
ஒரே நாடு ஒரே கலாச்சாரம், ஒரே நாடு ஒரே மதம், ஒரே நாடு ஒரே மொழி என்று தொடங்கி, இப்போது ஒரே நாடு ஒரே கட்சி, ஒரே நாடு ஒரே தலைவர் என்ற நிலைக்குப் போக விரும்புகிறது என்ற சந்தேகம் வந்துள்ளது. ஆக்டோபஸ் போல நாடு முழுவதையும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக முயல்கிறது.
இந்த முயற்சி வெற்றி பெறுமானால் நாட்டில் ஜனநாயகம் பறிபோய்விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மத்தியில் மோடி ஆட்சிக்கு எச்சரிக்கை மட்டுமல்ல, அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கும் தொடக்கமாக இருக்கப்போகிறது.
புதுச்சேரி மாநிலத்துக்கு என்று பல பிரச்சினைகள் இருக்கின்றன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன, புதிய தொழில்களுக்கு வாய்ப்பில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இங்கே வரும் மத்திய பாஜக அமைச்சர்கள் அதற்காக எதையும் செய்யவில்லை. பாஜக பெருமுதலாளிகளின் ஆதரவோடு, பெருந்தொகையுடன் மட்டுமே தேர்தலைச் சந்திக்கிறது.
பெருமுதலாளிகளின் ஆதரவோடு இந்தியாவிலேயே பெரும்பணம் படைத்த கட்சியாக பாஜக இருக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டு அதிகாரத்துக்கும், ஆட்சிக் கவிழ்ப்புக்கும் பாஜக பயன்படுத்தி வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்ததோடு, புதுச்சேரியிலும் ஆட்சியைக் கவிழ்த்துள்ளனர். ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் மதிக்காத கட்சியாக பாஜக உள்ளது. பாஜகவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற இத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
புதுச்சேரியில் ஆதார் தகவலைத் தவறான முறையில் பெற்று பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளது. இது ஜனநாயக விரோதச் செயல், அத்துமீறல். இதனை ஏற்க முடியாது. இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. அரசும், தேர்தல் ஆணையமும் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. பாஜகவைப் பார்த்து நாங்கள் அச்சப்படவில்லை. அவர்களின் ஆதிக்கத்தால், நாட்டு மக்களுக்கு என்ன ஆகுமோ என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது".
இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT