Published : 03 Apr 2021 04:08 PM
Last Updated : 03 Apr 2021 04:08 PM
கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவற்றாததால்தான் தேர்தலில் நிற்க நாராயணசாமிக்கு பயம். தேர்தலுக்குப் பிறகு நாராயணசாமி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார் என முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் இன்று சோம்பட்டு கிராமம் முழுவதும் வீதி வீதியாக நடந்து சென்று வாக்குக் கேட்டார். அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து அவர் மக்களிடம் பிரச்சாரத்தில் பேசியதாவது:
''பூச்சாண்டி காட்டுவதுதான் நாராயணசாமியின் வேலை. ஏற்கெனவே வைத்திலிங்கம் முதல்வராக இருந்தபோது விடுதலைப் புலிகள் இருப்பதாக அவர் பூச்சாண்டி காட்டி எதையாவது கூறிவிட்டுப் போய்விடுவார். அந்தச் செய்தி உண்மையா, பொய்யா என யாருக்குமே தெரியாது. பொய்யான தகவல்களைப் பரப்புவதுதான் நாராயணசாமியின் பழக்கம். அவர் காலம்காலமாக சொல்லிவந்த பொய்யால் இன்று காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் காணாமல் போயுள்ளது. காங்கிரஸ் கட்சி படுபாதாளத்துக்குச் சென்றதற்கு நாராயணசாமியே காரணம். நாராயணசாமியின் பொய் பேச்சு மற்றும் செயல்பாடு காரணமாகத்தான் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள். காரணம் பொய் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது.
நாராயணசாமி காரணமாகவே பலரும் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர். அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதாலும் மாநில வளர்ச்சிக்கு எந்தக் கட்சி சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்துதான் நாங்களெல்லாம் பாஜகவில் இணைந்துள்ளோம். எந்த மிரட்டலுக்காகவும் பாஜகவில் இணையவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். மாநில வளர்ச்சிக்காக இந்த முடிவை மக்கள் எடுத்து விட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு வளர்ச்சியையும் நாராயணசாமி அளிக்கவில்லை. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றும், ஆளுநர் தடுக்கிறார் என்றும் நாராயணசாமி கூறுகிறார். மத்தியில் பாஜக ஆட்சிதான் தொடர இருக்கிறது. அப்படியிருக்க அவருக்கு வாக்களித்தால் எப்படி புதுச்சேரி வளர்ச்சிக்குப் பாடுபடுவார். இவரால் எதுவுமே செய்ய முடியாது. எதுவுமே செய்ய முடியாது. இவருக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும்?
2016-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாத நாராயணசாமி, புதிதாக வாக்குறுதி அளிக்க எவ்விதத் தகுதியும் இல்லை. நாராயணசாமி நிறையப் பேருக்கு வாக்குறுதி அளித்து எதையும் நிறைவேற்றவில்லை. 2016ஆம் ஆண்டு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும் என்றார். யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. சொன்ன வாக்கைக் காப்பாற்றத் தவறுவதுதான் நாராயணசாமியின் முக்கிய வேலை.
எல்லாத் திட்டத்தையும் நிறைவேற்றியதாகக் கூறும் நாராயணசாமி எதற்கு இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. தேர்தலில் நிற்க அவர் பயப்படுகிறார். காரணம் மக்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என நாராயணசாமியின் மனசாட்சிக்கே தெரியும். தேர்தலுக்குப் பிறகு நாராயணசாமி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்''.
இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT