Published : 03 Apr 2021 03:49 PM
Last Updated : 03 Apr 2021 03:49 PM
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோடு மோதக்கூட பாஜகவுக்குத் தகுதியில்லை. இவர்களால் திமுகவுடன் எவ்வாறு மோத முடியும்? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் அண்ணா சிலை அருகே திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பாவை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (ஏப்.03) திறந்த வேனில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
’’இந்தத் தேர்தல் இதற்கு முன்பு சந்தித்த தேர்தல் போன்றதல்ல. அதிமுக தலைமையிலே ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும் என இரு துருவங்களாக மோதுகின்றோம் என்றாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைக் குறிவைத்து பாஜக காய்களை நகர்த்தித் தேர்தலைச் சந்திக்கிறது.
அதிமுக, பாமக தோள்களில் ஏறி பாஜக களத்திற்கு வந்துள்ளது. அக்கட்சியால் நேரடியாகத் தமிழகத்தில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவி கூட வெற்றி பெற முடியாது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லை என்பதால், தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விடலாம், திமுகவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோடு மோதக்கூட பாஜகவுக்குத் தகுதியில்லை. இவர்களால் திமுகவுடன் எவ்வாறு மோத முடியும்? அதனால்தான் அதிமுக, பாமக முகமூடி போட்டுக்கொண்டு பாஜக வருகிறது.
தமிழக மக்கள் எப்படிப் போனால் என்ன, தமிழகத்தில் ஆட்சிக்கு மீண்டும் வரவேண்டும். சேர்த்த சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும். வருமான வரி சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் அதிமுகவும், பாமகவும், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன.
ஆனால், திமுக, பாஜகவின் முகத்திரையைக் கிழிக்க விசிக உடனான தோழமைக் கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து எதிர்க்கிறது. ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை செய்த வருமான வரித்துறை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டியதுதானே?
திமுகவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவே இந்த ரெய்டு. கருணாநிதி எவ்வளவு துணிச்சல் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதை அறியாமல் ஸ்டாலினுடன் மோதுகின்றனர்.
எப்படியும் திமுக கூட்டணி உடைந்துவிடும். 6 சீட்டுக்கு திருமாவளவன் ஒப்புக்கொள்ள மாட்டார். அதனால் திமுக கூட்டணி உடையும் என அதிமுக கூட்டணியினர் நினைத்தனர். 30 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிற நாம், அதிமுக, பாஜக என்ன நினைக்கிறது? என்ன எதிர்பார்க்கிறார்கள் என உணரத் தெரியாதவர்களா?
பாஜகவுக்குத் தமிழகத்தில் இடம் இல்லை என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல். பாஜகவை எதிர்த்தே திமுக கூட்டணியில் 6 சீட்டுக்கு முதல் கையெழுத்து இட்டேன். பாஜகவின் எதிர்பார்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்காது.
மாநிலக் கட்சிகள் இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக மற்றும் பாமகவை பாஜக விழுங்கிவிடும். அதிமுக கூட்டணியை ஆதரித்தால் தமிழகத்தை மோடிதான் ஆட்சி செய்வார்’’.
இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT