Published : 03 Apr 2021 04:48 PM
Last Updated : 03 Apr 2021 04:48 PM
அந்தியூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் பணத்தைப் பதுக்கி வைத்து, தேர்தல் செலவுக்குப் பிரித்து வழங்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகப் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பணமோ, ஆவணங்களோ கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக, பள்ளி நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் - அத்தாணி சாலையில் தோப்பூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் நிர்வாகிகளாக உள்ளனர். இப்பள்ளியில், அதிமுகவினர் பணத்தைப் பதுக்கியுள்ளதாகவும், இங்கிருந்து வேட்பாளர்களுக்குப் பணம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார் சென்றதையடுத்து, ஈரோடு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று (ஏப். 03) காலை 8 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பகல் 12.30 மணிக்கு சோதனை முடிந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
சோதனை குறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், "அந்தியூரில் இருந்து கோபி சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று இந்த சாலை வழியாகச் சென்றபோது, பள்ளிக்கு வந்து காபி சாப்பிட்டு, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துச் சென்றார்.
இதையடுத்து, அமைச்சர் இங்கு பணத்தைப் பதுக்கி விட்டார், இங்கிருந்து பணம் அனுப்பப்படுகிறது என்று யாரோ வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். நான்கு கார்களில் வந்த அதிகாரிகள் காலை 7 மணியில் இருந்து மதியம் வரை சோதனை செய்தார்கள். பள்ளி வார்டன், தலைமை ஆசிரியர் தொடங்கி வாட்ச்மேன் வரை 8 பேரின் செல்போன்களைப் பறித்துக் கொண்டனர்.
சோதனைக்குப் பின் பள்ளி ஆவணங்கள் சிலவற்றை ஜெராக்ஸ் எடுத்தனர். சோதனை முடிவில், தவறான தகவல், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT