Published : 03 Apr 2021 08:09 AM
Last Updated : 03 Apr 2021 08:09 AM
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். கரோனாவால் முடங்கிப்போய் உள்ள மதுரை சுற்றுலாவை மீட்டெடுக்கவும், மேம்படுத்தவும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றது. இக்கோயிலில் உள்ள எட்டு கோபுரங்களின் கட்டிடக்கலையும், கோயில் உட்பிரகார அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் பார்ப்போரை வியக்க வைக்கிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இந்தக் கோயிலில் திருவிழாக்கள் நடப்பதால் மதுரை திருவிழா நகரம் எனப் பெயர்பெற்றது.
தமிழகம் மட்டுமில்லாது வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து இந்தக் கோயிலுக்கு ஆன்மிக, சுற்றுலா ரீதியாக ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டே மதுரை நகர் உருவானது.
இந்தக் கோயிலில் மாதந்தோறும் விழாக்கள் நடந்தாலும், சித்திரைத் திருவிழாவின்போது நடக்கும் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், தேர்த்திருவிழா போன்றவை பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வார்கள்.
இதுதவிர தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, விநாயகர் சதூர்த்தி உள்ளிட்ட விழா காலங்களிலும் பக்தர்கள் திரள்வார்கள். இப்படி பாரம்பரிய திருவிழாக்களாலும், அதன் கட்டிடக் கலையாலும் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்கு கரோனாவுக்கு முன்பே பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது.
கரோனாவுக்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடியோடு குறைந்தது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வர ஆர்வம் காட்டவில்லை. மதுரைக்கு மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளே மற்ற சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வார்கள்.
தற்போது அவர்கள் வராததால் மதுரை சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி சுற்றுலா தொழில்களும் முற்றிலும் முடங்கின. ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுற்றுலாவையும், மற்ற சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ஏற்கெனவே அதற்கு முன் ஒவ்வொரு முறையும் அவர் மதுரை வரும்போது மீனாட்சியம்மன் கோயிலையும், மதுரையைப் பற்றியும் ஓரிரு வரியாவது பேசி நெகிழ்ச்சியடைவார். அதனால், கிடப்பில் கிடக்கும் ‘எய்ம்ஸ்’ திட்டத்தை மட்டுமில்லாது மதுரையின் இழந்த பராம்பரியச் சுற்றுலாவை மீட்டெடுக்க புதிய சுற்றுலாத் திட்டங்களைக் கொண்டு வர பிரதமர் முயற்சி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு மதுரை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை ட்ராவல் கிளப் சித்ரா கூறுகையில், ‘‘2023-ம் ஆண்டுவரையே சுற்றுலாத்துறை உலகம் முழுவதுமே பெரிய அளவுக்கு முன்னேற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு இந்தத் தொற்றுநோய் பரவாது என்ற சூழ்நிலை வந்த பிறகே 2023க்குப் பிறகு சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலைப் பொறுத்தவரையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், பிற மாநிலச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து சென்றனர். தற்போது கரோனா தாக்கத்தால் அவர்கள் வருகை முற்றிலும் முடங்கியது.
ஊட்டி, கொடைக்கானலில் உள்நாட்டு மக்களாவது ஒரளவு வருவதால் அங்குள்ள சுற்றுலாத் தொழில்கள் முடங்காமல் தட்டுத் தடுமாறி நடக்கின்றன. மதுரையில் சுற்றலா சார்ந்த இயங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், வாடகை கார்கள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்டவை முற்றிலும் நலிவடைந்து போய் உள்ளன. உதாரணமாக ரிசார்ட்டுகளை தினமும் நடத்தவே பெரும் முதலீடுகள் தேவை.
ஆனால், தற்போது வருமானமே இல்லாமல் அதிலில் முதலீடு செய்த தொகையையும் பெற முடியாமல் தொழில் முனைவோர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
அதனால், தற்போது மோடி வந்ததாலும், அவரால் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் உடனடியாக சுற்றுலாத் துறையை மேம்படுத்திவிட முடியாது. கரோனா தொற்று கட்டுப்படுத்துதலைப் பொறுத்தே மதுரை மட்டுமில்லாது மற்ற சுற்றுலா நகரங்களும் மீள வாய்ப்புள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT