Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM
தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பலரும் தமிழகத்தை சூறாவளியாக சுற்றி வந்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய தொகுதிகள் பலவற்றில், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டது, மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பழங்குடியின மக்களுக்கென ஒதுக்கப்பட்ட ஏற்காடு மற்றும் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களை, எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் இதுவரை நேரில் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருப்பது, அப்பகுதி மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தொகுதியில், சேர்வராயன் மலையின் மீது ஏற்காடு கோடை வாழிடம் மற்றும் 65 மலை கிராமங்கள் உள்ளன. மேலும், கல்வராயன் மலைத் தொடரில் உள்ள பல கிராமங்களும் இத்தொகுதிக்குள் அடங்கியுள்ளன. இதேபோல், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கொல்லிமலையில் 14 பெரிய கிராமங்களுக்குள் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட சிறிய மலை கிராமங்கள் உள்ளன.
இந்த மலை கிராமங்களுக்கு, அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்கள் சார்ந்த கட்சியின் மாவட்ட பிரமுகர்கள் மட்டுமே பிரச்சாரத்துக்கு வந்த நிலையில், விஐபி அரசியல் பிரமுகர்கள் எவரும் பிரச்சாரத்துக்கு வரவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன், ஏற்காட்டுக்கு நேரில் வந்து மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
ஆனால், தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் ஏற்காடு தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக, மலை மீதேறி எந்த தலைவரும் பிரச்சாரத்துக்கு வரவில்லை. மாறாக, தொகுதிக்கு உட்பட்ட சமவெளிப் பகுதிகளான அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி உள்ளிட்ட இடங்களில் தமிழக முதல்வர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்காடு வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதேநிலை தான், சேந்தமங்கலம் தொகுதிக்கும். அத்தொகுதியின் வேட்பாளர்களை ஆதரித்து, நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு முன்னரே நம்மை புறக்கணிக்கின்றனரே என்று பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT