Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

சேலத்துக்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை எனக்கூறிய திமுக தலைவர் ஸ்டாலின் புதிய மேம்பாலங்கள் வழியாகத்தானே காரில் சென்றிருப்பார்: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி கேள்வி

சேலம்

‘சேலம் மாவட்டத்துக்கு எதுவுமே முதல்வர் செய்யவில்லை என்று கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் வழியாகத் தானே காரில் சென்றிருப்பார். அல்லது பாம்பு, பல்லி போல ஊர்ந்து சென்றாரா?’ என சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் கோட்டை மைதானத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சங்ககிரி அதிமுக வேட்பாளர் சுந்தரராஜன், சேலம் வடக்கு தொகுதி வேட்பாளர் வெங்கடாஜலம், தெற்கு தொகுதி வேட்பாளர் பாலசுப்பிரமணியன், மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் அருள், மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வை மக்கள் வெற்றி பெற செய்து, திமுக-வுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும். இப்போதே, திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரிகளை மிரட்டி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது, மக்கள் சொத்து அபகரிக்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சி காலத்தில் அபகரிக்கப்பட்ட 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டு கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் அதிமுக-வின் கோட்டை. கடந்த தேர்தலில் 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி யார் என்று கேள்வி கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது, தினம் தோறும் ஊர் ஊராகச் சென்று எனது பெயரை உச்சரித்து வருகிறார். எங்களின் பலத்தை ஸ்டாலின் குறைத்து எடை போட்டுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா அரசியல் பள்ளியில் பாடம் பயின்றவர்கள் நாங்கள். பிரதமர் மோடி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 234 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். திமுக ஆட்சியில் முறைகேடு செய்த 13 அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சியாக திமுக உள்ளது.

சேலம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள், சீர்மிகு நகர திட்டத்தில் ரூ.1000 கோடியில் உள்கட்டமைப்பு வசதி, மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் மினிகிளினிக், சேலம் மாவட்டத்துக்கு மட்டும் 110 அம்மா மினி கிளினிக், மருத்துவக் கல்லூரியில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என எண்ணற்ற பல நலத்திட்டங்களை அதிமுக அரசில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை திமுகதலைவர் ஸ்டாலின், எம்பி கனி மொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சுற்றிச்சுற்றி வருகின்றனர். சேலம் வந்த திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் சேலம் மாவட்டத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் வழியாகத் தானே காரில் சென்றிருப்பார். அல்லது பாம்பு, பல்லி போல ஊர்ந்து சென்றாரா?. இந்திய அளவில் பொய் பேசுவதற்கு என்று நோபல் பரிசை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கலாம்.

திமுக தலைவர் மக்களை பற்றி சிந்திப்பதில்லை. தனது குடும்பத்தை பற்றியே சிந்திக்கிறார். வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திமுக-வுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வரும் தேர்தலில், பொதுமக்கள் அதிமுக-வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x