Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM
திமுகவின் கோட்டையான துறைமுகத்தை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் நிறைந்த தொகுதியாக துறைமுகம் விளங்குகிறது. சென்னை மாவட்டத்திலேயே மிகக் குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர்.
போக்குவரத்து நெரிசல், இட நெருக்கடி, சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் ஏற்படுத்தப்படாதது, பெரும்பாலான தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
திமுகவின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதி, அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் இந்த தொகுதி நீண்ட காலம் விஐபி தொகுதி அந்தஸ்தை பெற்றிருந்தது. 1977 முதல் 2011 வரை இத்தொகுதி திமுகவின் கோட்டையாகவே இருந்தது. அதிமுகவில் இணைந்த பழ.கருப்பையாவுக்கு, 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார்.
இதில் பழ கருப்பையா வெற்றி பெற்று, திமுகவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின்னர் 2016-ல் நடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பி.கே.சேகர்பாபு பெற்றிபெற்று, துறைமுகம் தொகுதியை மீண்டும் திமுக வசமாக்கினார்.
இந்த தேர்தலில் பி.கே.சேகர்பாபு மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தலில் அதிமுக 37,235 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தனித்து போட்டியிட்ட பாஜக 13,357 வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது, அதிமுக கூட்டணியில் உள்ளதால் துறைமுகத்தை கைப்பற்றும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதேநேரத்தில், கடந்த தேர்தலில் இல்லாத மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது தங்கள் அணியில் இருப்பதாலும், அதிமுக உடைந்து தற்போது அமமுக என்ற இன்னொரு கட்சி உருவாகியிருப்பதாலும் திமுக வேட்பாளர் சேகர்பாபு மிக எளிதாக வெற்றிக் கனியைப் பறிப்பார் என்று திமுகவினர் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த இரு கட்சிகளிடையே முக்கிய போட்டி நிலவும் நேரத்தில், மற்ற கட்சிகளால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT