Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

மதுராந்தகம் தொகுதியில் வெற்றி யாருக்கு?- மதிமுக - அதிமுக இடையே இருமுனைப் போட்டி

மதுராந்தகம்

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக-மதிமுக இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் வெல்வதற்கு 2 கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மதுராந்தகம் தொகுதியில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 366 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 482 பெண் வாக்களர்கள், 46 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 894 பேர் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, தேமுதிக சார்பில் மூர்த்தி, மக்கள் நீதி மய்யம் சார்பில் தினேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் சுமிதா ஆகியோர் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர்.

மதிமுக சார்பில் போட்டியிடும் மல்லை சத்யா தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர். விளையாட்டு வீரர். மதுராந்தகம் ஏரியை தூர்வார முழுமையான நிதி ஒதுக்கீடு பெறுவது, கலை அறிவியல் கல்லூரி அமைப்பது, மதுராந்தகம் அரசு மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளுடன் இணைந்து டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பது, இளைஞர்களுக்கு தற்காப்பு கலையை சொல்லிக் கொடுத்து வாக்கு சேகரிப்பது என்ற இவரது வாக்கு சேகரிக்கும் முறைகள் மக்களை கவர்ந்துள்ளன.

அதிமுகவில் போட்டியிடும் மரகதம் குமரவேல் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக அரசால் மதுராந்தகம் ஏரியை தூர்வார அரசாணை வெளியிடப்பட்டு முதல்கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. 40 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து இருப்பது இவரது பிரச்சாரத்தில் முக்கியமாக உள்ளது.

தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்து இவர் பிரச்சாரம் செய்து வருகிறார். கிராமப்புறங்களில் முதியோர் ஓய்வூதியம் பலருக்கு நிறுத்தப்பட்டது, பொதுவாகவே ஆளும் கட்சியினர் மீது இருக்கும் அதிருப்தி ஆகியவை இவரது பலவீனங்கள்.

மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். புதிய சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சிக்கல் இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பிரச்சாரம் இவருக்கு கை கொடுக்கிறது.

அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் மூர்த்திக்கு விஜயகாந்த் நேரில் வந்து பிரச்சாரம் செய்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் தினேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் சுமிதா ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அதிமுக-மதிமுக இடையேதான் இரு முனைப் போட்டி நிலவுகிறது. கடைசி நேர பிரச்சார யுக்திகள், மக்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றம் ஆகியவையே யாருக்கு வெற்றி என்பதை உறுதி செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x