Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM
திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி சென்னையின் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் ஆண்கள் 1,39,449 பேர், பெண்கள் 1,44,620 பேர், மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் என மொத்தம் 2,84,098 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 4 முறையும், பாமக ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.
தலைநகர் சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையான ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகள் இத்தொகுதியில் வருகின்றன. இங்கு வசிக்கும் மீனவ சமூகத்தவரின் குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. மேலும், மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கையான தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம் உள்ளிட்டவை நிறைவேற்றப்படவில்லை. மாமல்லபுரத்தில் பேருந்து நிலையம், சாலை வசதி, அரசு விடுதிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கக்கூடிய பல்நோக்கு மருத்துவமனை போன்ற கோரிக்கைகளும் நிலுவையிலேயே உள்ளன.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஆறுமுகம், திமுக கூட்டணியில் விசிக சார்பில் பாலாஜி, அமமுக சார்பில் கோதண்டபாணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் லாவன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் மோகனசுந்தரி, பகுஜன் சமாஜ் சார்பில் பக்கிரி அம்பேத்கர் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும், பாமக மற்றும் விசிக வேட்பாளர்களிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
"உள்ளூர் இளைஞர்களுக்கு சிறுசேரி தொழிற்பேட்டையில் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் பெற்றுத்தரப்படும். மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி, விசிக வேட்பாளர் பாலாஜி வாக்கு சேகரித்து வருகிறார். தொகுதிக்கு போதிய அறிமுகம் இல்லாதவர் என்பது இவரது பலவீனம். எனினும், இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், திமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியும் இவருக்கு பலம். சிறுபான்மையினர், வன்னியர் மற்றும் புறநகர்ப் பகுதி மக்களின் வாக்குகள் இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
பாமக வேட்பாளர் ஆறுமுகம், ``மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். புறநகர்ப் பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்'' போன்ற வாக்குறுதிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக மாவட்டச் செயலாளருக்கு சீட் வழங்காதால், கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் அமமுக வேட்பாளர் கோதண்டபாணியின் போட்டியால் இவருக்கான வாக்கு வங்கி சிதறும் என்பது பலவீனம். எனினும், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் மற்றும் இத்தொகுதியில் ஏற்கெனவே பாமக வெற்றி பெற்றது போன்றவை பலம் சேர்க்கிறது. வன்னியர் மற்றும் மீனவ சமுதாயத்தவரின் வாக்குகள் இவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
புதிய வாக்காளர்களின் வாக்குகள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கும், விவசாயிகளின் வாக்குகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனினும், திருப்போரூர் தொகுதியில் முதல்முறையாக நேரடியாக மோதும் பாமக - விசிக வேட்பாளர்களிடையேதான் போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT