Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM
யூனியன் பிரதேசமான புதுச்சேரி யில் அதிக முறை ஆட்சியை அலங்கரித்தது காங்கிரஸ்தான்.
புதுச்சேரியில் தேர்தல் முறை நடைமுறைக்கு வந்த 1964-ம் ஆண்டு 29 இடங்களில் போட்டியிட்டு, 21 இடங்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்தது. அதையடுத்து. 21 ஆண்டுகளுக்கு பின் 1985-ல் 20 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
அதையடுத்து 1991-ல் 19 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. 1996-ல் 20 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வென்று திமுக தலைமையிலான ஆட்சியில் தமாகா,கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றன. இந்த அமைச்சரவையில் திமுக விலகியதால் காங்கிரஸில் சண்முகம் முதல்வரானார்.
2001-ல் 21 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களை காங்கிரஸ் வென்று, தேர்தலில் நிற்காமல் முதல்வராக சண்முகம் இருந்தார். அவர் போட்டியிட யாரும் தொகுதியை விட்டுக் கொடுக்காத நிலையில் அவர் ராஜினாமா செய்யவே, முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.
பின்னர் 2006-ல் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டு 10-ல் வென்றது. முதல்வராக ரங்கசாமி தொடர்ந்த நிலையில், நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்ட சிலர் அவருக்கு எதிராக காங்கிரஸில் போர்க்கொடி தூக்கவே, முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமி நீக்கப்பட்டார். புதிய முதல்வராக வைத்திலிங்கம் பதவியேற்றார்.
பின்னர் 2016-ல் 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வென்றது. கடந்த 5 ஆண்டுகளில் எக்கச்சக்க குழப்பத்தில் சிக்கி காங்கிரஸ் கடும் சிக்கலை எதிர் கொண்டிருக்கிறது.
மாநிலத் தலைவர் நமச்சிவாயமே முதல்வராக முன்னிறுத்தப்பட்ட நிலையில், நாராயணசாமி திடீரென முதல்வரானது முதல், ஆளுநர் கிரண்பேடி பொறுப்பேற்றது, அதிகார மோதல், நமச்சிவாயம் வெளியேறியது, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாஜகவில் தஞ்சம் புகுந்தது என பல சிக்கல்களை புதுவை காங்கிரஸ் கடந்த சில மாதங்களில் எதிர்கொண்டிருக்கிறது.
கூட்டணிக் கட்சியான திமுகவுடனும் காங்கிரஸுக்கு உறவு சுமூகமாக இல்லை. அந்தச் சிக்கலுக்கு மத்தியிலேயே திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் களம் காண்கிறது.
இதுவரை போட்டியிட்ட தேர்தல்களை விட மிகவும் குறைந்த அளவாக 15 இடங்களில் மட்டுமேஇம்முறை காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதிலும், ஏனாம் தொகுதியில் வேட்பாளரே நிறுத்த முடியாமல் போனதால் 14 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்வர் பதவி வகித்து கடந்த 5 ஆண்டுகளாக புதுவைகாங்கிரஸ் அரசியலில் முன் நின்ற நாராயணசாமி இம்முறை போட்டியிடாததை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டி, பிரச்சாரம் செய்கின்றனர்.
டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதுவரையில் பிரச்சாரத்திற்கு வரவில்லை. தமிழகத்தில் திமுக தரப்பில் இருந்தும் பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் காங்கிரஸூக்கு ஆதரவு தரப்படவில்லை.ஆனாலும், ஸ்டாலின் இன்று புதுவைக்கு வருகிறார் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
எதிரணியில் உள்ள பாஜகவோ தினமும் ஒரு முக்கியத் தலைவர்களை டெல்லியில் இருந்து அழைத்து வந்து பிரச்சாரம் மேற்கொள்கிறது. அத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி பலரும் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளனர்.
நாராயணசாமி மட்டும் நாள்தோறும் மாலையில் தொடங்கி இரவு வரை பிரச்சாரம் செய்கிறார். பிற கூட்டணிக் கட்சியினரும் காங்கிரஸுக்கு கைகொடுக்காத சூழலில் வேட்பாளர்கள் மட்டுமேபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும், நாளை மாலையுடன் பிரச்சாரம் முடியும் சூழலில் நம்பிக்கையோடு தன்னந்தனியே பிரச்சார களத்தில் நம்பிக்‘கை’யோடு வலம் வருகின்றனர் புதுவை காங்கிரஸார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT