Published : 02 Apr 2021 10:40 PM
Last Updated : 02 Apr 2021 10:40 PM
பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடும் காவலர்கள் கூடுதல் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் காவல் பாதுகாப்புப்பணியில் பணியாற்ற உள்ள காவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் முறை இன்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 4 தொகுதிகளிலும் 1,371 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், 154 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எஞ்சியுள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் கணினி முறையில் தேர்வு செய்து, பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 499 வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ள 556 காவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தேர்தல் பொது பார்வையாளர்கள் மீனஜ்ஆலம், நீல்காந்த் எஸ்.ஆவாத், காவல் பொது பார்வையாளர் அவினாஷ்குமார், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்து, கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் முறையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடிகளில 499 வாக்குச்சாவடிகளில் ஒரு மையத்துக்கு ஒரு காவலர் வீதம் 499 காவலரும், ஒரே மையத்தில் 5 வாக்குச்சாவடிகளுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள 57 வாக்குச்சாவடி மையங்களில் தலா ஒரு காவலர் வீதம் 57 காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 556 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி மையத்தின் பணி ஒதுக்கீடு இன்று நடைபெற்றுள்ளது.
இந்த பணி ஒதுக்கீட்டின்படி பணி ஆணைகள் ஏப்ரல் 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)அந்தந்த காவலர்களிடம் வழங்கப்படும்.
எனவே, வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து முடியும் வரை மையத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அதேபோல, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள காவலர்கள் பணியின் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அங்கு நடைபெறும் நிகழ்வுகளை அவ்வப்போது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிசிடிவி கேமிராக்கள் செயல்பாட்டில் உள்ளதா ? என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். விழிப்புடன் பணியாற்றி நேர்மையான தேர்தல் நடைபெற காவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வில்சன்ராஜசேகர், (தேர்தல்) முருகானந்தம், தேர்தல் வட்டாட்சியர் பிரியா, திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT