Published : 02 Apr 2021 10:13 PM
Last Updated : 02 Apr 2021 10:13 PM
திமுகவை வழி நடத்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்துள்ள ஸ்டாலின், தமிழகத்தை எப்படி வழி நடத்துவார் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி வெள்ளிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, “அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள பழனிசாமி, ஒரு விவசாயி, திமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக உள்ள ஸ்டாலின், ஒரு அரசியல் வியாபாரி.
இந்தத் தேர்தல் ஒரு விவசாயிக்கும், ஒரு அரசியல் வியாபாரிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். விவசாயிகள், பாட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் என நெற்றில் வியர்வையை சிந்தும் அனைவரும் நம் பக்கம் உள்ளனர். ஏசி அறையில் உள்ளவர்கள் திமுக பக்கம் உள்ளனர். அவர்கள் தொழிலதிபர்கள், முதலாளிகள். விவசாயி வெற்றி பெற வேண்டும். முதலமைச்சராக வர வேண்டும் என ஸ்டாலின் துடிக்கிறார்.
எனது தம்பிகள் விடமாட்டார்கள். முதலமைச்சராக வர தகுதி வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் என்ற தகுதிதான் ஸ்டாலினுக்கு உள்ளது. வேறு தகுதி ஏதுமில்லை. விவசாயி என்ற தகுதி பழனிசாமிக்கு உள்ளது.
சமூக நீதி அடிப்படையில்தான், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. 40 ஆண்டுகால பாமக நிறுவனர் ராமதாசின் உழைப்பு, 21 பேரது உயிர் தியாகத்துக்கு, வன்னியர் சமூகத்துக்கு முதல் கட்டமாக 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. வன்னியர்களை போல், பின் தங்கிய நிலையில் பல சமுதாயங்கள் உள்ளது. அவர்களுக்கு தனித்தனியாக இடஒதுக்கீடு பெற்று தர வேண்டும் என்பதே நமது நோக்கம்.
திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவராக உள்ளார். ஒரு முறை கூட, சட்டப்பேரவையில் பேசியது கிடையாது. உள்ளே செல்வார், பின்னர் வெளிநடப்பு என கூறி வெளியே வந்துவிடுவார்.
எதற்கு வெளி நடப்பு செய்கிறோம் என அவருக்கே தெரியாது. அதற்கான காரணத்தை, துரைமுருகன் எழுதிக் கொடுப்பதை படிப்பார். சட்டப்பேரவையில் சட்டையை கிழித்து, பனியன் விளம்பரம் செய்தார்.
விரக்தியில் திமுக நிர்வாகிகள்
ஸ்டாலினுக்கும் விவசாயம் மற்றும் சமூக நீதி என்றால் என்ன என தெரியாது. தமிழகத்தின் சரித்திரம் மற்றும் வரலாறு தெரியாது. நமது நாட்டின் குடியரசு நாள்கூட தெரியாது. இப்படிப்பட்டவர், முதலமைச்சராக வர வேண்டுமா?. திமுகவை அண்ணாதுரை தொடங்கியதன் நோக்கமே, தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், மக்கள் முன்னேற வேண்டும் என்பதுதான். ஆனால், கருணாநிதி குடும்பதான் முன்னேறி உள்ளது. இந்த ஒரு குடும்பம் முன்னேறதான், அண்ணாதுரை கட்சி தொடங்கினாரா?. திமுக என்றால், ஒரு குடும்பம் என்றாகிவிட்டது. திமுக என்ற கட்சி, கம்பெனியாக மாறிவிட்டது.
திமுகவில் உள்ள நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர். பிஹாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் என்பவரை அழைத்து வந்து, அவருக்கு ரூ.700 கோடி கொடுத்து, என்னை எப்படியாவது முதலமைச்சராக்குங்கள் என கேட்கிறார். திமுகவில் யாரை நியமிக்க வேண்டும் என பிரசாத் கிஷோர் முடிவு செய்கிறார். திமுக நிர்வாகிகளை ஸ்டாலின் நம்பவில்லை. திமுகவை நடத்த தகுதி இல்லாதவர் ஸ்டாலின். தனது கட்சியை வழி நடத்த பிரசாத் கிஷோரை அழைத்து வருபவர், தமிழகத்தை எப்படி வழி நடத்துவார். பிரசாந்த் கிஷோரை நம்பி ஸ்டாலின் உள்ளார், நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்.
ஆ.ராசா மீது நடவடிக்கை இல்லை
தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய அலை வீசுகிறது. விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவரும், நமக்கு ஆதரவு. பெண்களுக்கும், பெண்மைக்கும், தாய்மைக்கும் திமுக எதிரானவர்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. கூட்டணியே அப்படிப்பட்ட கூட்டணி. முதலமைச்சரின் தாயை ஆ.ராசா இழிவாகப் பேசி உள்ளார். முதலமைச்சரின் தாயாக இருந்தாலும், விவசாயியின் தாயாக இருந்தாலும் தாய் தாய்தான். ஒரு தாயை பற்றி தரக்குறைவாக எப்படி பேசலாம். அவருக்கு யார் தைரியம் கொடுத்தது.
ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. நடிகை நயன்தாராவை பற்றி தவறாக பேசிய நடிகர் ராதாரவி மீது கோபப்பட்ட ஸ்டாலின், அவரை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், தாயை பற்றி கொச்சையாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பெண்களை தெய்வமாக வணங்கும் தமிழ் மண் இது. திமுகவை தாய்மார்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT