Published : 02 Apr 2021 09:14 PM
Last Updated : 02 Apr 2021 09:14 PM

தென்மாவட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு வராத அன்புமணி ராமதாஸ்: பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கே வராததால் கட்சியினர் சோர்வு

மதுரை

பாமக போட்டியிடக்கூடிய வடமாவட்டங்களில் மட்டுமே சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், கோ.க.மணி உள்ளிட்ட அதன் தலைவர்கள் இதுவரை தென் மாவட்ட பிரச்சாரத்திற்கு வராத நிலையில் இன்று மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கும் கூட வராதது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

பாமக தொடங்கிய காலம் முதலே அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் வடமாவட்டங்களில் மட்டுமே கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டினார்.

தர்மபுரி, சேலம், விழுப்புரம், அரியலூர், கடலூர், கள்ளகுறிச்சி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக செல்வாக்குள்ள கட்சியாக பாமக செயல்படுகிறது.

வடமாவட்டங்கள் அளவிற்கு தென் மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் இல்லாததால் இங்கு கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது நீண்ட நெடுங்காலமாக உள்ளது.

அதைத் தவிர்க்க, கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் அடிக்கடி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், கோ.க.மணி உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் தென் மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கலந்து கொண்டு கட்சியினரை உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வழக்கம்போலவே பாமக, வட மாவட்டங்களிலே அதிக ‘சீட்’ பெற்றது. தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் மட்டுமே பாமக போட்டியிடுகிறது.

ஆத்தூர் தொகுதியில் பாமக போட்டியிடுவதால் இந்த முறை தென் மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு அன்புமணி ராமதாஸ், கோ.க.மணியாவது வருவார்கள் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர்.

அவர்களும், இன்று பிரதமர் பங்கேற்கும் மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு, திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வது போல் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர்களுடைய இந்தத் தேர்தல் சுற்றுப்பயணமும் ரத்தாகியுள்ளது.

இனி, அன்புமணி ராமதாஸ், கோ.க.மணி உள்ளிட்டவர்கள் தென் மவாட்டங்களுக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு வர வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களுக்கு அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராததால் பாமக கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். தென்மாவட்டங்களில் பாமக வாக்கு வங்கி குறைவு என்றாலும் இருக்கும் கட்சியினர், அவர்கள் ஆதரவாளர்கள் வாக்குகளை பெறவாது பாமக தலைவர்கள் தேர்தல் பிரச்சரத்திற்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், சொந்த வேட்டாளர் போட்டியிடும் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கே அவர்கள் வர ஆர்வம்காட்டாதது அக்கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால தேர்தல் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் கூட்டணிகளில் பாமக போட்டியிட்டபோது பெரும்பாலான தொகுதிகளில் வடமாவட்டங்களிலே அக்கட்சி ‘சீட்’ போட்டியிட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பெரும்பாலும் போட்டியிடுவதை தவிர்த்தே வந்துள்ளது. முடியாத பட்சத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே அக்கட்சி போட்டியிடுகிறது.

இது குறித்து மதுரை மாநகர தெற்கு மாவட்டசெயலாளர் பாலமுருகனிடம் கேட்டேபோது, ‘‘இன்று 2ம் தேதி திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய அன்புமணி ராமதாஸ், கோ.க.மணி உள்ளிட்டோர் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர்கள் வரவில்லை. இனி அவர்கள் வருவதற்கு வாய்ப்பில்லை, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x