Published : 02 Apr 2021 06:37 PM
Last Updated : 02 Apr 2021 06:37 PM
எனது சகோதரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துபவர்கள் தைரியமிருந்தால் என் வீட்டில் வந்து நடத்தட்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் இல்லத்திலும், அவரது கணவர் சபரீசன் அலுவலகம், அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் இன்று (ஏப். 02) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பணப் பட்டுவாடா செய்யத் திட்டமிட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. ஒரே நாளில் ஸ்டாலின் மகள் மற்றும் திமுகவினருக்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெறுகிறது.
இதுகுறித்து ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பேசுகையில், ''ஐடி, சிபிஐ வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்று மட்டும் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக. மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன். மிசாவையே, எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கிஞ்சிற்றும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்'' எனப் பேசினார்.
இந்நிலையில், இது தொடர்பாக, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி, "இன்று காலையில் என் சகோதரி செந்தாமரை வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றுள்ளது. நான் மறுபடியும் இன்னொரு சவால் விடுக்கிறேன். நீங்கள் போனீர்களே. என் வீட்டு முகவரியைத் தருகிறேன். எண்.25/9, செனடாப் ரோடு, சித்தரஞ்சன் சாலை. தைரியமிருந்தால் என் வீட்டுக்கு ரெய்டுக்கு வாருங்கள்" எனப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT