Published : 02 Apr 2021 06:38 PM
Last Updated : 02 Apr 2021 06:38 PM

‘நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் மிக்க மகிழ்ச்சி’: தமிழில் பேசிய பிரதமர் மோடி

மதுரை

மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, ‘நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என தமிழில் பேசி அசத்தினார்.

மதுரை அம்மா திடலில் அதிமுக- பாஜக கூட்டணி தேர்தல் பரப்பரை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மதுரை வந்த பிரதமர் மோடி, பசுமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரவில் தங்கினார்.

அங்கிருந்து இன்று காலை 11.45-க்கு கூட்டம் நடைபெற்ற அம்மா திடலுக்கு வந்தார். பொதுக்கூட்டத்தில் 12.10-ல் தொடங்கி 12.40 வரை பேசினார்.

பிரதமர் பேசத் தொடங்கியதும் ‘வெற்றி வேல், வீர வேல், வெற்றி, வெற்றி, வெற்றி வேல், வீர, வீர, வீர வேல்’, வணக்கம், நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என தமிழில் பேசினார்.

அதன் பிறகு ஆங்கிலத்தில் பேசினார். அவரது பேச்சை பாஜக பொதுச் செயலர் ஆர்.சீனிவாசன் தமிழில் மொழி பெயர்த்தார்.

அம்மா திடலில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். மேடைக்கு வந்ததும் பிரதமர் மோடி பாஜகவினரை பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்தார்.

பிரதமர் வரும் வரை மேடை பாஜக கட்டுப்பாட்டில் இருந்தது. பிரதமர் வரும் வரை கூட்டணிக் கட்சித் தலைவர்களாக தேவநாதன் யாதவ், திருமாறன், ஜான்பாண்டியன், முன்னாள் எம்.பி., ராம்பிரபு, எச்.ராஜா, மதுரை வடக்கு பாஜக வேட்பாளர் சரவணன் ஆகியோர் பேசினர்.

பிரதமர் வந்ததும் மேடை அதிமுகவுக்கு கைமாறியது. பிரதமர் வந்ததும் முதலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். ராஜன் செல்லப்பா வரவேற்றார். பின்னர் துணை முதல்வர், முதல்வர், பிரதமர் பேசினர். முடிவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நன்றி கூறினார்.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி, மத்திய இணை அமைச்சர் விகே. சிங், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், தேனி எம்.பி ரவீந்திரநாத் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

வேட்பாளர்களுக்கு மாநாட்டு பந்தலில் தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் வேட்பாளர்கள் பிரதமருடன் ஒரே மேடையில் இருந்தனர். வேட்பாளர்களுக்காக தனியாக அமைக்கப்பட்டிருந்த மேடை பயன்படுத்தப்படாமல் இருந்தது.

பிரதமர் மோடிக்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் மீனாட்சியம்மன் கோவில் புகைப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கினர்.

பிரதமர் பொதுக்கூட்டம் நடைபெற்றதால் மதுரை சுற்றுச்சாலையில் பாண்டி கோவில் சந்திப்பு முதல் விரகனூர் ரவுண்டானா வரை காலை 7.30 மணி முதல் 2 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இந்தச் சாலையில் பொதுக் கூட்டத்திற்கு சென்ற கட்சியினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சுற்றுச்சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் நகருக்குள் விடப்பட்டதால் விரகானூர், தெப்பக்குளம், அண்ணாநகர் பகுதிகளில் சுமார் 7 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுக்கூட்ட திடலுக்குள் கட்சியினர் 9 மணிக்கு முன்பே வர வேண்டும் என அறிவித்தப்பட்டிருந்தது. மேடைக்கு பிரதமர் வந்த பிறகு வந்தவர்கள் பொதுக்கூட்ட திடலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் விஐபி பாஸ்களுடன் வந்தவர்கள் பாதுகாப்புப் பணியிலிருந்து போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சுமார் 70 வயது முதியவர், விஐபி பகுதி வழியாக பொதுக்கூட்ட பந்தலுக்குள் செல்ல முயன்றார். அவரை போலீஸார் விடாததால் அவருக்கு பாஜக மாநில நிர்வாகி ஒருவர் விஐபி பாஸ் கொடுத்தார். இருப்பினும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை.

பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் போலீஸாரின் கெடுபிடி அதிகமாக இருந்தது.பேனா, தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் கட்சியினர், செய்தியாளர்கள் தவித்தனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, தமிழில் பேசியதை, பிரதமருக்கு புரிய, மீண்டும் ஆங்கிலத்தில் பேசினார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசினார். தமாகாவை சேர்ந்த முன்னாள் எம்.பி ராம்பிரபு, சவுராஷ்டிரா மொழியில் பேசி வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூட்டம் முடிந்தும் மதியம் ஒரு மணியளவில் பிரதமர் ராணுவ ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா புறப்பட்டு சென்றார். பிரதமர் சென்ற ஹெலிகாப்டருடன் மேலும் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் சென்றன.

ஆயுதப்படை கூடுதல் டிஜிபி சங்கர் ஜூவால் தலைமையில் 7000 போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

கி.மகாராஜன்/ என்.சன்னாசி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x