Published : 02 Apr 2021 05:52 PM
Last Updated : 02 Apr 2021 05:52 PM
தோல்வியை எதிர்கொள்ளும்போது பாஜக கடைப்பிடிக்கும் வழிமுறைதான் எதிர்க்கட்சி மீதான வருமான வரித்துறை ரெய்டு என, ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் இல்லத்திலும், அவரது கணவர் சபரீசன் அலுவலகம், அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் இன்று (ஏப். 02) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பணப் பட்டுவாடா செய்யத் திட்டமிட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. ஒரே நாளில் ஸ்டாலின் மகள் மற்றும் திமுகவினருக்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெறுகிறது.
இதுகுறித்து ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பேசுகையில், ''ஐடி, சிபிஐ வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்று மட்டும் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக. மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். மிசாவையே, எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கிஞ்சிற்றும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்'' எனப் பேசினார்.
மேலும், பாஜக அரசின் ஆணையின்படி வருமான வரித்துறை செயல்படுகிறது என, தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். வருமான வரித்துறை சோதனைக்கு விசிக, இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் உறுப்பினரும் ஐடி ரெய்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சியையோ மாநிலத்தையோ குறிப்பிடாமல் ராகுல் காந்தி ஒற்றை வாக்கியத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "தோல்வியை எதிர்கொள்ளும்போது பாஜக கடைப்பிடிக்கும் வழிமுறைதான் எதிர்க்கட்சி மீதான வருமான வரித்துறை ரெய்டு" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
Raiding the opposition is BJP’s coping mechanism when facing electoral defeat.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT