Published : 02 Apr 2021 01:15 PM
Last Updated : 02 Apr 2021 01:15 PM
''என்டிஏவுக்கு வாக்களித்தால் அதிக பயன்கள் இந்த மாநிலத்துக்குக் கிடைக்கும். அதன் மூலம் அதிக அளவில் தொழில் முதலீடுகளை நிறுவ உள்ளோம். குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்கள். அதன் மூலம் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதிலும் குறிப்பாக உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் தொழிலை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என நினைக்கிறோம்'' என்று பிரதமர் மோடி பேசினார்.
மதுரையில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
“மதுரை மக்களே நல்லா இருக்கீங்களா? மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த மதுரை மண் மீனாட்சி அம்மன் ஆட்சி புரிகிற மண். நேற்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. மதுரை மண் புண்ணிய பூமியாகவும் வீர பூமியாகவும் உள்ள மண். அழகர் பெருமான் ஆலயம் உள்ள மண், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அமைந்துள்ள மண் இது.
மதுரை மண் தமிழ்ப் பண்பாட்டின் நாகரிகத் தொட்டிலாக உள்ளது. உலகத்தின் மிகப் பழமையான தமிழ் மொழிக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆழமான இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள். காந்தியிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மண் இந்த மண். முத்துராமலிங்க தேவர், மருதுபாண்டி சகோதரர்கள், வஉசி, இம்மானுவேல் சேகரன், காமராஜர் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
என்னுடைய மாநிலம் குஜராத்தைச் சேர்ந்த சௌராஷ்டிரா மக்கள் வசிக்கிறார்கள், தெலுங்கு மொழி பேசும் மக்களும் வசிக்கின்றனர். பாரதம் என்பதற்கு சிறந்த உதாரணமாக மதுரை உள்ளது. தென் தமிழ்நாடு முக்கியமாக மதுரை, எம்ஜிஆர் மீது மிகுந்த பற்று கொண்ட ஊர். 'மதுரை வீரன்' என்ற படம் எம்ஜிஆர் நடித்துப் புகழ் பெற்றது.
அதேபோல் எம்ஜிஆருக்குக் குரல் கொடுத்த பின்னணிப் பாடகர் டி.எம்.எஸ்ஸை மறக்க முடியுமா? 1980-ல் காங்கிரஸ், எம்ஜிஆர் ஆட்சியைக் கலைத்தது. எம்ஜிஆர் மதுரை மேற்கு தொகுதியில் நின்றார். மக்கள் எம்ஜிஆர் பின்னால் பாறைபோல் அணிவகுத்து நின்றனர். எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் அமைந்தது. 1977, 80, 84 தேர்தல்களில் மூன் றுமுறையும் எம்ஜிஆர் இங்கிருந்துதான் தேர்வு செய்யப்பட்டார். அவரது முழுமையான ஈடுபாடு நமக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
எல்லோருக்குமான வளர்ச்சி, எல்லோராலும் வளர்ச்சி என்கிற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த மந்திரம் 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தென் தமிழகத்தில் உள்கட்டுமானம், நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். நான் கடந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் பேசும்போது வருங்காலத் தலைமுறை வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் கோடியைச் செலவிட உள்ளதாகத் தெரிவித்தேன்.
இப்போதைய தலைமுறை மக்கள் மட்டுமல்ல எதிர்காலத் தலைமுறை மக்களும் பயன்பெறுவர். இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நிறைய பொருளாதார வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன். அதில் ஒன்றுதான் மதுரை கொல்லம் திட்டம். ரயில்வே கட்டுமானங்களுக்கு இதுரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 238% கட்டுமான திட்டங்கள் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
வருங்காலத்தில் இதைவிட அதிகமான மெட்ரோ, ரயில், விமானச் சேவையைத் தமிழகத்துக்கு கொண்டுவர உள்ளோம். அதிவேக பிராட் பேண்ட் சேவையும் அனைத்து கிராமங்களிலும் இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிஎம் வாணி திட்டத்தை ஒப்புதல் கொடுத்து ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் வைஃபை வசதி நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நமது வர்த்தக வசதி ஏற்பட உள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
நமக்குத் தெரிந்த அனைத்து திருவிளையாடல்களிலும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்க்கலாம். அது தண்ணீருடன் தொடர்புடைய ஒன்று. தண்ணீரின் சேமிக்கும் தேவையை இந்த தேசம் அறிந்துள்ளதைப் பார்க்கிறோம். அதற்காகத்தான் இந்த அரசு தண்ணீர் தேவைக்காக ஜல்ஜீவன் திட்டத்தை அறிவித்தது. இந்தியா முழுவதும் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் இல்லங்களுக்கு தண்ணீர் கொண்டுவருவதுதான் இலக்கு. அதன்மூலம் தமிழகம் முழுவதும் 16 லட்சம் இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிநீரைக் கொண்டு வந்துள்ளோம்.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நிறைய குடிநீர் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அதன் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் என நம்புகிறோம். அதன்மூலம் வைகையில் எந்நேரமும் நீர் புரளும் என்று நம்புகிறேன். என்டிஏவுக்கு வாக்களித்தால் அதிக பயன்கள் இந்த மாநிலத்துக்குக் கிடைக்கும். அதன்மூலம் அதிக அளவில் தொழில் முதலீடுகளை நிறுவ உள்ளோம். குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்கள். அதன் மூலம் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதிலும் குறிப்பாக உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் தொழிலை உருவாக்கும் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என நினைக்கிறோம். நமது அரசாங்கம் ஜவுளித் துறைக்காக மிக அதிக திட்டங்களை அறிவித்துள்ளது. மித்ரா திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள் வர உள்ளன”.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT