Published : 02 Apr 2021 12:55 PM
Last Updated : 02 Apr 2021 12:55 PM
நாம் இழந்துள்ள உரிமையை மீட்க திமுகவுக்கு வாக்களியுங்கள் என, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், திமுக வேட்பாளர்கள் குன்னம் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் எம்.பிரபாகரன், அரியலூர் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப் 02) திறந்த வேனில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, ஸ்டாலின் பேசியதாவது:
"உங்கள் தொகுதிக்கு வரும் போதெல்லாம் மறைந்த மாணவி அனிதாவின் நினைவுதான் ஞாபகத்துக்கு வருகிறது. கல்விக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்டவர் அனிதா. அவரது பெயரில் சென்னை கொளத்தூரில் பயிற்சி மையம் தொடங்கி 1,000 பேருக்கு வேலை வழங்கியுள்ளேன்.
நாம் இழந்துள்ள உரிமையை மீட்க திமுகவுக்கு வாக்களியுங்கள். தமிழை அழிக்கவும், இந்தியைத் தமிழகத்தில் திணிக்கவும் மத்திய அரசு முயல்கிறது. நீட் உள்ளிட்ட தேர்வுகளைக் கொண்டு வந்து தமிழ் சமூக மாணவ, மாணவிகளை முடக்க மத்திய அரசு முயல்கிறது.
கொளத்தூரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அனிதா பெயரில் பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். அதிமுகவின் அரசைக் காப்பாற்றி வருவது மோடி அரசு.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்தியது திமுக ஆட்சி. அதேபோல், பல சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீட்டை வழங்கியது திமுக. வன்னியர் உட்பட 107 சாதி மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியதும் திமுக.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் கொண்டு வந்ததும் திமுகதான். கருணாநிதி எவ்வாறு அனைத்து மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கினாரோ, அதே போல் அவரது மகனான ஸ்டாலின் ஆகிய நானும் அவரது வழியைப் பின்பற்றுவேன்.
தாராபுரத்தில் பேசியபோது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று மோடி கூறினார். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை அறியாமல் மோடி பேசுகிறார். அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆளுவது பாஜக. அங்கு ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அது உங்களுக்குத் தெரியாதா என கேள்வி எழுப்பினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதை திமுக முன்னிறுத்தி தேர்தலில் பிரச்சாரம் செய்வதைக் கண்ட மோடி, அவரது ஆட்களை அனுப்பி எனது மகள் வீட்டில் ரெய்டு நடத்துகிறார். இன்று மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி எய்ம்ஸ் பற்றிப் பேசமாட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயங்கொண்டத்தில் முந்திரி, காகித தொழிற்சாலைகள், அரியலூர் பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்படும். செந்துறையில் முந்திரிசாறு தொழிற்சாலை அமைக்கப்படும். கொள்ளிடம் குடிநீர் திட்டம் ஜெயங்கொணடத்துக்கு கொண்டுவரப்படும். செந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும், திருமானூரில் அரசு கலைக்கல்லூரியும் தொடங்கப்படும். பெரம்பலூர், லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடை திட்டம், பெரம்பலூரில் வெங்காயப் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT