Published : 02 Apr 2021 12:33 PM
Last Updated : 02 Apr 2021 12:33 PM
கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அண்ணாவின் சிலை தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (ஏப். 02) அதிகாலை மர்ம நபர்கள் சிலர், அண்ணா சிலைக்குத் தீ வைத்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இதனால் அண்ணா சிலை மூடி வைக்கப்பட்டிருந்த துணி தீப்பற்றி எரிந்தது.
இதில், அண்ணா சிலை சேதமடைந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சிலையைப் பார்வையிட்டுத் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக
தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர் அண்ணாவின் சிலையைக் கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் கொடூர எண்ணம் கொண்டோர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது.
அமைதி தவழும் தமிழகத்தை வன்முறைக் காடாக்க நினைக்கும் சக்திகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு ஜனநாயக ஆயுதத்தால் நிச்சயம் தண்டிப்பார்கள். அண்ணாவின் பெயரை லேபிளாகக் கொண்ட அடிமைக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெரியார், அண்ணாவின் சிலைகள் மட்டுமின்றி, அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் சிலைகளும் சிதைக்கப்படுகின்றன.
இத்தகைய வன்முறைப் போக்கை ஒடுக்க தைரியமின்றி, எதிர்க்கட்சிகளை வக்கணை பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் உள்ளிட்டவர்களின் போக்கு வெட்கக்கேடானது.
வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியில், நேற்று நள்ளிரவு ஒரு நாசகார கும்பல் அண்ணாவின் சிலைக்கு நெருப்பு வைத்திருக்கிறது. அண்ணாவின் சிலை மீது மூடப்பட்டிருந்த துணி எரிந்து, சிலை கருகி இருக்கிறது. இந்த இழிவான செயலில் ஈடுபட்ட காவிக்கும்பலைக் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா சிலைகளை அவமதிக்கும் போக்கு தொடர்வதற்கு சனாதனக் கும்பல்களின் தூண்டுதலே காரணமாகும்.
அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில், நச்சு விதைகளைத் தூவி, தேர்தலில் அறுவடை பெற்றுவிடலாம் என்ற மதவாத சனாதனக் கூட்டத்தின் முயற்சி தவிடுபொடி ஆகும்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவை மாநகருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள வன்முறைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள்.
இத்தகைய நாசகார கூட்டத்திற்கு துணை நிற்பவர்களையும் தமிழக மக்கள் முற்றாகத் துடைத்து எறிவார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதைக் காட்டும்.
இவ்வாறு ஸ்டாலின், வைகோ தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT