Published : 02 Apr 2021 12:19 PM
Last Updated : 02 Apr 2021 12:19 PM
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ய முயன்றதாக, அதிமுக வேட்பாளர் தரப்பில் இருந்து ரூ.18 லட்சத்து 41 ஆயிரம் ரொக்கப் பணம், வாக்காளர் பட்டியல், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, அதிமுக வேட்பாளர் ராமு உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. நாளை மறுதினம் (ஏப்.04) மாலை 7 மணிக்கு பிரச்சாரம் முடிய உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட தெள்ளூர் கிராமத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நேற்று முன்தினம் இரவு (மார்ச் 31) இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.17 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் தேர்தல் துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிரக் கண்காணிப்பு:
காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளராக வி.ராமு போட்டியிடுகின்றனர். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் ஆதரவாளர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சுமார் ரூ.10.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யும் பணியைத் தடுக்கும் நோக்கில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.18.41 லட்சம் பறிமுதல்:
காட்பாடி மெட்டுக்குளம் பகுதியில் உள்ள உணவகத்தில் வாக்காளர்களுக்கு மொத்தமாகப் பணம் விநியோகம் செய்யும் பணி நடைபெறுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (ஏப்ரல் 01) நள்ளிரவு 12 மணியளவில் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் செலவினப் பார்வையாளர் அமித் கரண், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், பறக்கும் படை அலுவலர் நரேஷ் குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் அந்த விடுதியில் நள்ளிரவு 1 மணியளவில் உள்ளூர் காவல் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினருடன் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளைப் பார்த்ததும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. காவலர்கள் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து அந்த உணவகத்தில் இன்று (ஏப்.02) அதிகாலை வரை நடைபெற்ற சோதனையில் ரூ.18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.1,300 தொகையைத் தவிர்த்து மற்ற அனைத்தும் 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு லேப்டாப், 2 செல்போன்கள், 3 மதுபாட்டில்கள், ஏடிஎம் கார்டு, துண்டுப் பிரசுரங்கள், வாக்காளர் பட்டியல், வார்டு வாரியாக வாக்காளர்ளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேடுகளையும் பறிமுதல் செய்தனர்.
ஒரு ஓட்டுக்கு ரூ.500:
பறிமுதல் செய்யப்பட்ட குறிப்பேடுகளில் வாக்குச்சாவடி வாரியாகப் பணம் விநியோகம் செய்த நபர், அவரது செல்போன் எண், எத்தனை வாக்காளர்களுக்கு ரூ.500 வீதம் பணம் விநியோகம் செய்யப்பட்டது, மீதியுள்ள தொகை குறித்த விவரங்களை முழுமையாக எழுதியுள்ளனர். இதில், சேண்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட 99-வது வாக்குச்சாவடியில் உள்ள 726 வாக்காளர்களுக்கும் மணிகண்டன் என்பவர் மூலமாக, ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பணம் 100 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பணம் விநியோகம் செய்தவர்கள் தங்களுக்குரிய பகுதியில் எவ்வளவு பணம் விநியோகிக்கப்பட்டது என்ற கணக்கை முறையாக ஒப்படைத்துக் கையெழுத்திட்டுள்ளனர்.
9 பேர் மீது வழக்குப் பதிவு:
காவல்துறையினர் வசம் பிடிபட்ட 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கணேஷ், நரேஷ், மோகன் குமார், மோகன், ராஜசேகர், ஷோபன்பாபு (அதிமுக வேட்பாளர் ராமுவின் சகோதரர்), சரவணன், கோபிநாத் என்று தெரியவந்தது.
இதையடுத்துப் பணம் பறிமுதல் தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் பறக்கும் படை அலுவலர் நரேஷ்குமார் இன்று (ஏப்ரல் 02) புகார் அளித்தார். அதில், தங்கும் விடுதியில் படிபட்ட 8 பேருடன் அதிமுக வேட்பாளர் ராமுவின் மீது புகார் அளித்தார். அதன்பேரில், 147 (சட்ட விரோதகமாக கூடுதல்), 294-பி (ஆபாசமாகப் பேசுதல்), 353 (அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்), 117-இ (வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகள் வாங்க முயன்றது), 506 (1) - (மிரட்டல் விடுத்தது) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வருமான வரித்துறை விசாரணை:
தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுகுறித்து வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டதுடன் அது தொடர்பாக தனியாக விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT