Last Updated : 02 Apr, 2021 11:49 AM

 

Published : 02 Apr 2021 11:49 AM
Last Updated : 02 Apr 2021 11:49 AM

மேலிடத் தலைவர்கள் வருகையில்லை; நாராயணசாமியும் போட்டியில்லை: கரை சேருமா காங்கிரஸ்?

புதுச்சேரி

காங்கிரஸில் மேலிடத் தலைவர்கள் ஒருவர் கூட பிரச்சாரத்துக்கு இதுவரை புதுச்சேரிக்கு வரவே இல்லை. முதல் முறையாக குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் சூழலில், முதல்வராக இருந்த நாராயணசாமியும் போட்டியிடவில்லை. அவர் மீதான அதிருப்தியால் ஆட்சியில் பதவியில் இருந்தோர் தொடங்கி நிர்வாகிகள் வரை பலரும் வெளியேறியுள்ள சூழலில், இத்தேர்தலில் காங்கிரஸ் கரை சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரிக்கும் காங்கிரஸுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அதிக முறை ஆட்சியை அலங்கரித்தது காங்கிரஸ்தான். முக்கியமாக மத்தியில் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததும் ஒரு காரணம்.

புதுச்சேரியில் தேர்தல் முறை நடைமுறைக்கு வந்த 1964-ல் 29 இடங்களில் போட்டியிட்டு 21 இடங்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்தது. அதையடுத்து 21 ஆண்டுகளுக்குப் பிறகுதான் 1985-ல் 20 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அதையடுத்து 1991-ல் 19 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

1996-ல் 20 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வென்று திமுக தலைமையிலான ஆட்சியில் தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றன. இந்த அமைச்சரவையில் திமுக விலகியதால் காங்கிரஸில் சண்முகம் முதல்வரானார்.

2001-ல் 21 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களை காங்கிரஸ் வென்று, தேர்தலில் நிற்காமல் முதல்வராக சண்முகம் இருந்தார். அவர் போட்டியிட யாரும் தொகுதியை விட்டுக் கொடுக்காத நிலையில் அவர் ராஜினாமா செய்யவே முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.

பின்னர் 2006-ல் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டு 10-ல் வென்றது. முதல்வராக ரங்கசாமி தொடர்ந்த நிலையில், நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்ட சிலர் அவருக்கு எதிராக காங்கிரஸில் போர்க்கொடி தூக்கவே, முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமி நீக்கப்பட்டார். புதிய முதல்வராக வைத்திலிங்கம் பதவியேற்றார்.

பின்னர் 2016- ல் 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வென்றது. மாநிலத் தலைவராக இருந்த நமச்சிவாயம் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டதால் அவர் முதல்வராக வருவார் என எதிர்பார்த்த நிலையில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். அப்போது ஆளுநராக கிரண்பேடி வந்ததால் தொடர் மோதல் மட்டுமே புதுச்சேரியில் நிலவியது.

கட்சியிலும் நாராயணசாமி மற்றும் நமச்சிவாயம் இடையிலான பனிப்போரும் அதிகரித்தது. புதுச்சேரியில் முதல் முறையாக முதல்வரே சாலையில் இறங்கி ஆளுநருக்கு எதிராகப் போராடிய நிகழ்வுகளும் நடந்தன. காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நமச்சிவாயத்தை விலக்கி தனது ஆதரவாளரான ஏ.வி.சுப்பிரமணியனை நாராயணசாமி கொண்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் மோதல் முற்றி அமைச்சர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸிலிருந்து நமச்சிவாயம் விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த தீப்பாய்ந்தானும் பாஜகவில் சேர்ந்தார். தொடர்ந்து நிர்வாகிகள் பலரும் விலகி பாஜகவில் இணைந்தனர். மற்றொரு புறம் காங்கிரஸிலிருந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி பல முக்கிய நிர்வாகிகளும் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தனர். அத்துடன் கூட்டணிக் கட்சியான திமுகவுடனும் காங்கிரஸுக்கு உறவு சுமுகமாக இல்லை.

தேர்தல் வந்தவுடன் மீண்டும் காங்கிரஸ் - திமுக கூட்டணியால், இடியாப்ப சிக்கலில் சிக்கிய காங்கிரஸுக்கு தொகுதிப் பங்கீட்டில் கடும் சிக்கல் நிலவியது. இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் மிகவும் குறைந்த அளவாக 15 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது. முக்கியமாக ஏனாம் தொகுதியில் வேட்பாளரே நிறுத்த முடியாமல் போனதால் 14 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ள சூழலும் முதல் முறையாக ஏற்பட்டது. காங்கிரஸ் அரசில் தலைமை வகித்து முதல்வர் பதவியைப் பெற்ற நாராயணசாமி போட்டியிடாமல் பின்வாங்கியதும் அடுத்த பின்னடைவாக எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்கின்றனர்.

எதிரணியில் உள்ள பாஜகவோ தினமும் ஒரு முக்கியத் தலைவரைப் பிரச்சாரத்துக்கு புதுச்சேரிக்கு வரவழைக்கிறது. அத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி பலரும் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளனர். பாஜகவில் பிரதமர் மோடி தொடங்கி முக்கிய அமைச்சர்கள் வரை பலரும் தினமும் பிரச்சாரத்துக்கு வந்த சூழலில் காங்கிரஸில் இருந்து முக்கியத் தலைவர்கள் யாரும் இதுவரை பிரச்சாரத்துக்கே வராத சூழலும் நிலவுகிறது.

தற்போது நாராயணசாமி மட்டும் மாலை தொடங்கி இரவு வரை பிரச்சாரம் செய்கிறார். கூட்டணிக் கட்சியினரும் காங்கிரஸுக்கு கைகொடுக்காத சூழலில் வேட்பாளர்கள் மட்டுமே பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். அவர்கள் காங்கிரஸுக்கு கைகொடுத்து கரை சேர்ப்பார்களா என்பது தேர்தல் முடிவில் தெரியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x