Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM
தமிழகத்தின் தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி 1952-ம்ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்து வருகிறது. பழமையான சுப்பிரமணியர் கோயில், பொள்ளாச்சி மாரியம்மன், சூலக்கல் மாரியம்மன் கோயில்கள், தென்னை நார் உற்பத்தி ஆலைகள், மிகப்பெரிய கால்நடைச் சந்தை உள்ளிட்டவை இந்த தொகுதியின் அடையாளங்கள்.
அனுப்பர்பாளையம், சிக்கராயபுரம், சின்ன நெகமம், தேவம்பாடி, குள்ளக்காபாளையம், மண்ணூர், நல்லூத்துக்குளி, என்.சந்திராபுரம், புரவிபாளையம், புளியம்பட்டி, ராமபட்டணம், ராசக்காபாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, திம்மங்குத்து, வடக்கிபாளையம், பணப்பட்டி, மெட்டுவாவி, ஜமீன்முத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம், ஆச்சிப்பட்டி என அதிகளவில் கிராமங்களை கொண்ட இந்த தொகுதியில் பொள்ளாச்சி நகராட்சியின் 36 வார்டுகளும், பெரிய நெகமம் (பேரூராட்சி) ஆகிய நகர்புற பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. கொங்கு வேளாளர், செட்டியார், தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில், பிற சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர்.இத்தொகுதியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுகவின் டாக்டர் வரதராஜன், மக்கள் நீதி மய்யத்தின் சதீஷ்குமார், அமமுக சார்பில் முன்னாள் எம்.பி.சுகுமார், நாம் தமிழர் கட்சியின் லோகேஷ்வரி மற்றும் சுயேச்சைகள் உட்பட 8 பேர் களத்தில் நின்றாலும், திமுக- அதிமுக இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது.
முக்கியப் பிரச்சினைகள்
பேருந்து நிலையம் விரிவாக்கம், செவிலியர் கல்லூரி, நகராட்சி பகுதி விரிவாக்கம், மேம்படுத்தப்பட்ட நூலகம்,நெகமம் பகுதியில் தீயணைப்பு நிலையம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கோதவாடி குளத்துக்கு பிஏபி தண்ணீர், தென்னை வளர்ச்சி வாரிய கிளை அலுவலகம், நகரப்பகுதியில் 24 மணி நேர குடிநீர் ஆகிய கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத பாதாளச் சாக்கடை திட்டம், தோண்டப்பட்ட நகர சாலைகள், நெரிசல்மிகுந்த நகரின் முக்கிய சாலைகள், தனி மாவட்டம் கோரிக்கை நிறைவேற்றப்படாதது ஆகியவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
வளர்ச்சிப் பணிகள்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு புதிய கட்டிடங்கள், அரசு கலைக்கல்லூரி, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள் கொண்ட ஒன்பது மாடி கட்டிடம், சிறப்பு மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் 6 மாடி கொண்ட முன்னோடி மருத்துவமனை கட்டிடம், 212 கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், மேற்கு புறவழிச்சாலை, கிட்டசூரம்பாளையம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, பாலக்காடு சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டிவருவது ஆகிய வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக பலம்
கடந்த 1952 முதல் இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில், 9 முறை அதிமுக வென்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் 2001, 2006 மற்றும் 2016 தேர்தல்களில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கிராமப்பகுதிகளை அதிகம் கொண்ட இந்த தொகுதியில் பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதும், காலம்காலமாக தங்களுக்கு கிடைத்து வரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பற்று கொண்ட கிராமத்து முதியோர்களின் வாக்கு வங்கி தங்களது பலம் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
அதிமுக பலவீனம்
கடந்த மக்களவை தேர்தலில் பெரும்தாக்கத்தை உருவாக்கிய பாலியல் சம்பவம் அதிமுகவுக்கு பெரும் சரிவை தந்தது. பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பாலியல் சம்பவம் குறித்தும் கிராமந்தோறும் திமுகவினர் மேற்கொள்ளும் தீவிர பிரச்சாரத்துக்கு அதிமுகவினர் தன்னிலை விளக்கம் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிறைவேற்றப்படாத கோரிக்கைகளும் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
திமுக பலம்
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில்இல்லாவிட்டாலும் பொள்ளாச்சிபகுதியில் பல்வேறு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி தொண்டர்களுடன் கட்சியை இணைப்பில் வைத்துள்ளனர்.
டாக்டர் வரதராஜன் 30 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவப் பணி மூலம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் பிரபலமானவர். 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு 23 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். கவுண்டர் சமூகமும் , தலித் மக்களும் அதிகம் உள்ள இந்த தொகுதியில், கொமதேக, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
திமுக பலவீனம்
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொமதேகவுக்கு இம்முறை இத்தொகுதி ஒதுக்கப்படும் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் திமுகவுக்கே ஒதுக்கப்பட்டதால் கொமதேகவினரிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திமுகவில் வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்கள் வேட்பாளருக்கு ஒத்துழைப்பார்களா என்ற ஐயமும், திமுகவுக்கு பலவீனமாக கருதப்படுகிறது.
சவால்களை எதிர்கொண்டு தொகுதியை தக்க வைக்க அதிமுகவும், தொகுதியை கைப்பற்ற திமுகவும் மும்முரமாக களம் இறங்கி பணியாற்றி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT