Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

வேளச்சேரி தொகுதியில் வெல்லப் போவது யார்? - அதிமுக - காங்கிரஸ் வேட்பாளர்களிடையே கடும் போட்டி

வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். படங்கள்: எம்.முத்துகணேஷ்

சென்னை

சென்னையில் கனமழை பெய்யும்போதெல்லாம், அதிகம் பாதிக்கப்படும் தொகுதிகளில் ஒன்று வேளச்சேரி. ஒரு காலத்தில் வயல்வெளிகளும், நீர் நிலைகளும் சூழ சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த வேளச்சேரி. தற்போது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு இடங்கள், தொழில் நிறுவனங்கள் என்று பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்போது அடையாறு கிழக்கு, அடையாறு மேற்கு, வேளச்சேரி, தரமணி, பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சென்னை மாநகராட்சியின் வார்டுகள் 151 முதல் 155 வரையிலான பகுதிகளை இணைத்து வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

2011-ல் முதல் தேர்தலை இந்த தொகுதி சந்தித்தது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வாகை சந்திரசேகர் வெற்றி பெற்றார். வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர்.

இத்தொகுதியில் 400-க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக உள்ளனர். இதனால் அடுக்கு மாடி குடியிருப்புகள் அபரிமிதமாக உருவாகியுள்ளன. இருப்பினும் மழைநீர், கழிவுநீர் ஆகியவை வடிந்து செல்வதற்கான வழிமுறைகள் செய்யப்படவில்லை என்பது இந்த தொகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் எம்.கே.அசோக், காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஹெச்.அசன் மவுலானா, அமமுக சார்பில் எம்.சந்திரபோஸ், மநீம சார்பில் சந்தோஷ்பாபு உட்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் அதிமுக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

2 கட்சிகளின் வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு அதிமுக தேர்தல் அறிக்கையை வீடுதோறும் விநியோகித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக்.

குறிப்பாக, அப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருவான்மியூர் உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மேம்பாலங்கள் அமைத்தல், வேளச்சேரி ஏரியை மேம்படுத்தி சுற்றுலா தலமாக தரம் உயர்த்துதல் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

அதேபோல், அதிமுக அரசின் குறைகளையும், திமுக - காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறுவதோடு, கனமழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளையும் விளக்கி, காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஹெச்.அசன் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

மநீம சார்பில் போட்டியிடும் சந்தோஷ்பாபு, வேட்புமனு தாக்கல் செய்தவுடனே, கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு தனிமைப்படுத்தி கொண்டார். இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் ஆதரவு திரட்டினர். கரோனாவில் இருந்து குணமடைந்த சந்தோஷ்பாபு, கடந்த 2 நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

வேளச்சேரி தொகுதியைப் பொறுத்தமட்டில் அதிமுக - காங்கிரஸ் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுவதால், அத் தொகுதியில் வெற்றிவாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x