Published : 02 Apr 2021 03:13 AM
Last Updated : 02 Apr 2021 03:13 AM
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த சோழிங்கநல்லூர் தொகுதியைக் கைப்பற்றுவதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதால், யார் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சோழிங்கநல்லூர், தாம்பரம் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. 2011-ம் ஆண்டு சோழிங்கநல்லூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. பிரபல ஐ.டி. நிறுவனங்கள் பலவும் இந்தத் தொகுதியில்தான் இருக்கின்றன. பல பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன. மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளன. அரசு கலைக் கல்லூரியும் உள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்கார தொகுதி என்றும் சொல்லப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய 2 மண்டலங்களும், பெரும்பாக்கம், சித்தாலபாக்கம், ஒட்டியம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் இத்தொகுதியில் உள்ளன. இந்தத் தொகுதியில் வன்னியர்கள், யாதவர்கள், ஆதிதிராவிடர்கள் கணிசமாக உள்ளனர்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.கந்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் வெற்றி பெற்றார். இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக, திமுக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.
தற்போதைய தேர்தலில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், அதிமுக சார்பில் கே.பி. கந்தன், தேமுதிக சார்பில் முருகன், மக்கள் நீதி மய்யம் சார்பாக ராஜீவ்குமார், நாம் தமிழர் சார்பில் ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர் உள்ளிட்ட 26 பேர் போட்டியிடுகின்றனர். இதில், அதிமுக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் பெருங்குடி, சோழிங்கநல்லூர் பேரூராட்சியாக இருந்தபோது தலைவராக இருந்துள்ளனர்.
எதிர்பார்ப்புகள்
தொகுதியில் கழிவுநீர், குப்பை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு, சுங்கச்சாவடிகள் அகற்றம், மழைநீர் வடிகால் வசதி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, அதிக வேலை வாய்ப்பு கிடைத்தாலும் போதுமான இடவசதியும், அடிப்படை வசதியும் இல்லை. பெரிய அரசு மருத்துவமனை இல்லை, தாலுகா நீதிமன்றம் ஆகியவை கோரிக்கைகளாக உள்ளன. தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.
நடுநிலையானவர்களின் வாக்குகளை பெறும் வகையில் மக்கள்நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிவேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே அமமுக சார்பில் நீலாங்கரை எம்.சி.முனுசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. நீலாங்கரை எம்.சி.முனுசாமி போட்டியிட்டிருந்தால் மும்முனை போட்டியாக இருந்திருக்கும்.
இருப்பினும் இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மத்தியில் மட்டுமே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு வெற்றிக் கனியை யார் பறிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT