Published : 02 Apr 2021 03:13 AM
Last Updated : 02 Apr 2021 03:13 AM
ராஜபாளையத்தில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றியப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று கிறிஸ்தவ அமைப்புகளின் போதகர்களை சந்தித்து அமைச்சர் வாக்கு சேகரித்தார். அனைத்து கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இருதயராஜ் தலைமையில் சேத்தூர் போதகர் சின்னப்பராஜ், போதகர் சிலிஸ்டர், ஹென்றி ஜான்சன், மலைக்கனி, டேவிட் ராமகிருஷ்ணன் மற்றும் ராஜபாளையம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத போதகர்கள் அமைச்சரின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:
கரோனா ஊரடங்கு காலத்தில் சாதி, மதம் பார்க்காமல் அனை வருக்கும் உதவி செய்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளைப்போல், இனிவரும் காலங்களிலும் கிறிஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன்.
கிறிஸ்தவ மக்கள் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். அனைவருக்காகவும் ஜெபம் செய்யக்கூடியவர்கள். ஒவ் வொருவருக்கும் தங்கள் மத வழிபாடுகளை மேற்கொள்ள உரிமை உள்ளது. அதில் மற்ற மதத்தினர் தலையிடக்கூடாது. அனைத்து மதங்களும் அமைதி யைத்தான் வலியுறுத்துகின்றன.
ராஜபாளையம் தொகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர், முக்கூடல் கூட்டுக் குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டம், ரயில்வே மேம்பாலம், 13 இடங்களில் முதல்வரின் அம்மா மினி கிளினிக் உட்பட ஏராளமான வளர்ச்சித் திட்ட பணிகளை நான் செய்து கொடுத்துள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் நான் வெற்றி பெற்று இன்னும் ஏராளமான பணிகளை செய்து கொடுக்க உள்ளேன். ராஜபாளையத்தில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
ஆண்டுக்கு இலவசமாக 6 காஸ் சிலிண்டர்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, இலவச வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை கட்டாயம் நிறைவேற்றுவோம். எனக்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT