Last Updated : 02 Apr, 2021 03:14 AM

 

Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM

வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை பாழ்படுத்தும் சுவரொட்டிகள்

கிராமங்களில் அரசு பள்ளிகள் பலவும் பெற்றோர் ஆசிரியர் கழக உதவியால் வண்ண ஓவியங்களைக் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அலுவலர்கள், தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை இவற்றின் மீது ஒட்டாமல், தனியாக பலகையில் ஒட்ட வேண்டும். படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளி களின் வண்ணமயமான வகுப்பறைகளை சேதப்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையம் சுவரொட்டிகளை ஒட்டுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அரசுப் பள்ளிகளில் இருக்கின்றன. இப்பள்ளிகளில் கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுக்கள், பெற்றோர் ஆசிரியர் அமைப்புகள் ஒத்துழைப்புடன் பல்வேறு தலைவர்கள், தாவரம் மற்றும் விலங்கு வகைகள், அறிவியல், கணித மாதிரிகள் வரையப்பட்டிருக்கின்றன. அத்துடன் பொன்மொழிகள், சிறந்த வாசகங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. வண்ணமயமாக காட்சியளிக்கும் இந்த வகுப்பறையை வாக்குச்சாவடிகளாக மாற்றியிருப்பதால், அவற்றில் தேர்தல் ஆணைய விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

வாக்குச்சாவடி சம்பந்தப்பட்ட பாகம் எண் உள்ளிட்ட விவரங்கள், வாக்களிக்கும் முறை குறித்த அறிவிப்பு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெயர் அடங்கிய வாக்குச்சீட்டின் மாதிரி, வேட்பாளர்கள் பட்டியல், அம்புக்குறியிட்ட காகிதங்கள் போன்றவை வாக்குச்சாவடிகளில் ஒட்டப்படுகின்றன. வாக்குப்பதிவு பகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களை காட்டும் இருவேறு சுவரொட்டிகள் வாக்குச் சாவடிக்கு வெளியே ஒட்டப்படுகின்றன.

தேர்தலின்போது இந்த சுவரொட்டிகளை ஒட்டுவதும், தேர்தலுக்குப்பின் அவற்றை கிழிப்பதுமாக இருக்கிறது. அவ்வாறு கிழிக்கும்போது வண்ண பெயின்ட் பூச்சு பெயர்ந்து அசிங்கமாகிவிடுகிறது. வண்ணப்படங்களும் வீணாகிவிடுகின்றன. இதனால் மீண்டும் பணம் செலவிட்டு மறுபடியும் படங்களை வரைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில் வாக்குச் சாவடிகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை அட்டைகளில் ஒட்டி தொங்கவிடலாம். அல்லது போர்டுகளில் ஒட்டி வைக்கலாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட செயலாளர் பால்ராஜ் கூறும்போது, ``இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஏற்கெனவே முறையிட்டிருந்தோம். வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டாமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x