Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM

தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது: தி.மலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு ஆரூடம்

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் பேசும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு.

திருவண்ணாமலை

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் தனக்கோட்டி தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் செயலாளர் ராஜசேகர், மாவட்ட இணை செயலாளர் செந்தில்மாறன் மற்றும் மாவட்டத் தலைவர் மண்ணு லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் பழனி வரவேற்றார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான எ.வ.வேலு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா உட்பட ஐந்து மொழிகளின் வளர்ச்சிக்காக ரூ.29 கோடி ஒதுக்குகின்றனர். ஆனால், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.649 கோடி ஒதுக்குகின்றனர். இவர்களிடம் தமிழகத்தை ஒப்படைக்கலாமா?. தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள் ளோம். பல இனங்கள் வாழும் இந்திய நாட்டில், ஒரு மதம் மட்டுமே வாழ வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.

ஆன்மிக உணர்வுகளுக்கு மதிப் பளிக்கின்ற காரணத்தால்தான், பாஜக ஆட்சியில் தொல்லியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்ட அண்ணாமலையார் கோயிலைமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மீட்டுக் கொடுத்துள்ளார். இதனால் பக்தர்கள் வருகை மட்டும் இல்லாமல், தொழில் சார்ந்த வணிகமும் பெருகிறது. மாட வீதியை சிமென்ட் சாலையாக மாற்றப்படும். தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்வோம். அண்ணாமலையார் திருக்கோயில் ஒளி விளக்குகளால் மின்ன நடவடிக்கை எடுக்கப்படும்.

வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசியிருக்கிறேன். கரோனா காலத்தில், அரசின் ஊரடங்கு உத்தரவால் கடைகள் மூடப்பட்டன. ஆனால். வரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளின் வாடகையை வசூலித் தனர்.

இதை எதிர்த்து கேள்வி கேட்டேன். இது தொடர்பாக ஆவண செய்வதாக சொன்ன முதல்வர் பழனிசாமி அரசு, எதையுமே செய்யவில்லை. மாநகராட்சிக்கும் நகராட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல், ஒரே மாதிரி வரியை விதிப்பது சரியா? என கேட்டேன். அதற்கும் நட வடிக்கை எடுக்கவில்லை.

வணிகர்களின் கோரிக்கை அனைத்தும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தீர்வு காணப் படும்” என்றார்.

இதில், முன்னாள் நகராட்சி தலைவர் தரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், சங்கச் செயலாளர் கந்தன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x