Published : 01 Apr 2021 09:07 PM
Last Updated : 01 Apr 2021 09:07 PM
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு, திமுக அரசு வந்ததும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கனிமொழி எம்.பி., பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஏ.ஆண்டிஅம்பலத்தை ஆதரித்து நத்தம் பேருந்துநிலையம் அருகே திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பேசியதாவது:
இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால் வெற்றிவிழா கூட்டம் போல் எழுச்சியும், உற்சாகமும் கலந்து காணப்படுகிறது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகும் காலம் நெருங்கி வந்துள்ளது.
நத்தம் தொகுதியில் போட்டியிடும் ஆண்டி அம்பலம் மிக எளிமையான மனிதர். மக்களோடு மக்களாக பழகக்கூடியவர். அவரை எளிதில் அணுகலாம்.
தமிழகத்தில் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் முதற்கட்டமாக அரசு காலி பணியிடங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு திமுக அரசு வந்ததும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டத்தை மாநில அரசு ஆதரித்து விட்டு இப்போது தேர்தலுக்காக மத்தியஅரசிடம் அழுத்தம் கொடுத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறுகிறார்.
கேஸ், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் அனைத்து அரசு டவுன் பஸ்களிலும் பெண்கள் அனைவருக்கும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.
ஜுன் 3 ந்தேதி கலைஞரின் பிறந்தநாளன்று கரோனா நிவாரண நிதி ரூ4ஆயிரம் வழங்கப்படும். நத்தம் அருகே செந்துறை பஞ்சந்தாங்கி அணை, கரந்தமலை தடுப்பணை போன்றவைகள் கட்டி விவசாய நீர் நிலைகளை உயர்த்தவும், ஜவுளி பூங்கா அமைக்கவும் திமுக அரசு அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பிரச்சாரத்தின்போது திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ., ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT